"தேஜஸ்வி யாதவ் தலைவரா? முட்டாள்களின் பேச்சு இது!" - லாலு பிரசாத் ஆவேசம்

"தேஜஸ்வி யாதவ் தலைவரா? முட்டாள்களின் பேச்சு இது!" - லாலு பிரசாத் ஆவேசம்
"தேஜஸ்வி யாதவ் தலைவரா? முட்டாள்களின் பேச்சு இது!"  - லாலு பிரசாத் ஆவேசம்

"ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சிக்கு என்றுமே நான் தான் தலைவர்; தேஜஸ்வி யாதவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பார் எனக் கூறுபவர்கள் அடி முட்டாள்கள்" என லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

பிகார் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தேசியத் தலைவர் லாலு பிரசாத், ஜார்க்கண்ட் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக அவர் தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார். இதற்கிடையே, லாலு பிரசாத் சிறைக்கு சென்றதும், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் கட்சிக்கு தலைமை ஏற்று வழிநடத்தி வந்தார். அவரது தலைமையை ஏற்காமல் பல மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேறினர். அதே சமயத்தில், பல புதிய முகங்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக பொறுப்பில் அமர்ந்தனர்.

இப்போது, லாலு பிரசாத் ஜாமீனில் உள்ள போதும், அவரது பேச்சு கட்சி மட்டத்தில் எடுபடவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசியத் தலைவராக தேஜஸ்வி யாதவ் விரைவில் பொறுப்பேற்பார் எனவும் சமீபகாலமாக யூகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தேசிய ஊடகங்கள் சிலவற்றிலும் இதுதொடர்பான செய்திகள் வெளியானதால் பிகார் அரசியல் களத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து லாலு பிரசாத்திடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், "ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சிக்கு என்றுமே நான் தான் தலைவர். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்பார் என தகவல்களை பரப்புவோர் அடி முட்டாள்கள்" என்றார்.

இந்த சூழலில், வரும் 10-ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் பாட்னாவில் நடைபெறவுள்ளது. இதில் கட்சியின் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்பதாக கூறப்படுகிறது. எனினும், லாலு பிரசாத் கலந்து கொள்வது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com