தரக்குறைவாக பேசிய பாஜக எம்.பி.: யார் இந்த ரமேஷ் பிதூரி? இதற்குமுன் அவர் பேசிய சர்ச்சை பேச்சுகள்!

பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. குன்வர் டேனிஷ் அலியை, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக எம்.பியான ரமேஷ் பிதூரி யார் என்பது குறித்து இதில் முழுவதுமாகத் தெரிந்துகொள்வோம்.
Ramesh Bidhuri
Ramesh Bidhuritwitter

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தரக்குறைவாகப் பேசிய ரமேஷ் பிதூரி!

கடந்த செப். 21ஆம் தேதி புதிய நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நடைபெற்ற சந்திரயான் 3 வெற்றி குறித்த விவாதத்தின்போது, பா.ஜ.கவின் தெற்கு டெல்லி எம்.பி. ரமேஷ் பிதூரி, மோடியைப் புகழ்ந்து பேசினார். அப்போது பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. குன்வர் டேனிஷ் அலி குறுக்கிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் பிதூரி, குன்வர் டேனிஷ் அலியைப் பார்த்து, ‘ஏய் பயங்கரவாதி உட்காரு’ என்றார். டேனிஷ் அலியின் மதத்தை குறிப்பிட்டும், கேட்கவே முடியாத அளவிற்கு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியும் ஆவேசமாக பேசினார் ரமேஷ் பிதூரி. தொடர்ந்து இதே வார்த்தையை அவர் பயன்படுத்தி பேசியது இணையதளங்களில் வைரலாகியது.

குன்வர் டேனிஷ் அலி, ரமேஷ் பிதூரி
குன்வர் டேனிஷ் அலி, ரமேஷ் பிதூரி

அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் பிதூரியின் பேச்சு!

அவரது பேச்சுக்கு, காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடும் எச்சரிக்கை விடுத்தார். இதற்கு அப்போதே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்தார். மேலும், அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கவும் சபாநாயகரிடம் வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து, அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள், பாஜக எம்.பி ரமேஷ் பிதூரியை அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த விவகாரம் குறித்து லோக்சபா சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என ஓம் பிர்லாவுக்கு குன்வர் டேனிஷ் அலி, கடிதம் எழுதினார். மேலும், லோக்சபாவில் பேசிய பேச்சு தொடர்பாக விளக்கம் கேட்டு, ரமேஷ் பிதூரிக்கு பா.ஜ.க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரமேஷ் பிதூரி யார்?

இப்படி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரமேஷ் பிதூரி யார் என்பது குறித்து இங்கு அறிவோம். ஸ்ரீரமேஷ் பிதூரி, தெற்கு டெல்லியில் ஸ்ரீராம்ரிக் - ஸ்ரீமதி சார்தோ தேவி தம்பதியருக்கு 1961ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் பிறந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம் முடித்தவர். கல்லூரிக் காலத்திலேயே தீவிர அரசியலில் இறங்கியவர். தொழில்ரீதியாக டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞரான ரமேஷ் பிதூரி, பாஜகவில் பல்வேறு நிலைகளில் பல பதவிகளை வகித்துள்ளார்.

ரமேஷ் பிதூரி
ரமேஷ் பிதூரிtwitter

ஒலிம்பிக் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங்கைத் தோற்கடித்த ரமேஷ் பிதூரி!

2003 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் முறையே துக்ளகாபாத் தொகுதியில் இருந்து டெல்லி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டு டெல்லி தெற்கு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் அதே தொகுதியில் இருந்து 2019ஆம் ஆண்டு மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்வானார். இந்த தேர்தலில், ரமேஷ் பிதுரி 367,043 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஒலிம்பிக் பதக்கம் வென்ற விஜேந்தர் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சதா ஆகியோரை பிதூரி வீழ்த்தினார்.

டெல்லி ஆம் ஆத்மி அரசைக் கடுமையாக விமர்சிப்பவர்!

தற்போது, ​​பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக உள்ளார். டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் நபர்களில் ரமேஷ் பிதூரியும் ஒருவர் எனக் கூறப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகள் மற்றும் அவை வழங்குவது குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரமேஷ் பிதூரி
ரமேஷ் பிதூரிtwitter

2 வழக்குகளில் விடுவித்த டெல்லி நீதிமன்றம்

மேலும், 2006இல் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசாரை தாக்க பொதுமக்களை தூண்டிய வழக்கில் இவரது பெயரும் அடிப்பட்டது. எனினும், இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் அவரை விடுவித்தது. அதுபோல், சமூக ஆர்வலர் ஒருவரை தானாக முன்வந்து காயப்படுத்தியதாக ரமேஷ் பிதூரி மீது வழக்குப்பதியப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதிலும், டெல்லி நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். அவர்மீது இன்னும் சில கிரிமினல் வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்தகாலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரமேஷ் பிதூரி

ரமேஷ் பிதூரி, தற்போது மட்டுமல்ல... இதற்குமுன்பும் சர்ச்சைக்குரிய வகைகளில் பேசியுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் வம்சாவளி குறித்து தவறாகப் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 ரமேஷ் பிதூரி,
ரமேஷ் பிதூரி,ட்விட்டர்

அதுபோல், கடந்த 2015ஆம் ஆண்டு, ஐந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை கோபப்படுத்தும் வகையில், பாலியல்ரீதியான கருத்துகளைப் பேசியிருந்தார். அதுபோல், கடந்த 2021ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரமேஷ் பிதூரி, முஸ்லிம்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவ அமைப்பின் தலைவர்கள் குறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com