ஓய்வுபெறும் சக்திகாந்த தாஸ்.. ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர்.. யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்கும் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் வரும் 11ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?
கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT) முன்னாள் மாணவரான சஞ்சய் மல்ஹோத்ரா, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ஆவார். 1990-ம் ஆண்டு ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ரா, முன்னதாக நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறை செயலாளராக பணியாற்றினார். இந்தப் பணியில் அவர் இருந்தபோது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்களை கையாண்ட அனுபவம் பெற்றவர். அவர் ஜிஎஸ்டி கவுன்சிலின் முன்னாள் செயலாளராகவும் பணியாற்றினார். அதற்கு முன்பு, மின் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் நிபுணத்துவம் பெற்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனமான REC லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பதவி வகித்தார்.
ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பதவியேற்க இர்க்கும் மல்ஹோத்ரா, அந்தப் பதவியில் அடுத்த மூன்று ஆண்டுகள் இருப்பார். கடந்த 33 ஆண்டு காலத்தில், சஞ்சய் மல்ஹோத்ரா மத்திய அரசின் எரிசக்தி, நிதி, வரித் துறை, தகவல் தொடர்பு மற்றும் சுரங்கத் துறை என பல துறைகளில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். நிதி மற்றும் வரி விதிப்பில் பல ஆண்டு கால அனுபவம் கொண்டவர் சஞ்சய். நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பு முறையின் வரிக் கொள்கைகளை உருவாக்கியதில் சஞ்சய் மல்ஹோத்ராவின் பங்கு மிக முக்கியமாக அமைந்திருந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.