நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ள ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தனது துறையில் தனி முத்திரை பதித்தவர். இவர் விண்வெளித்துறையில் இந்தியா அடியெடுத்து வைத்த ஆரம்ப காலகட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்.
1941ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த திருக்குறுங்குடியில் நம்பி நாராயணன் பிறந்தார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொறியியல் படித்த அவர், இஸ்ரோவில் 1966ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இஸ்ரோவில் அப்துல் கலாம் திடப்பொருட்களை எரிபொருளாக கொண்டு ராக்கெட் செலுத்துவது குறித்து ஆய்வு செய்த போது, நம்பி நாராயணன் திரவ எரிபொருட்கள் பயன்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
வாயுக்களை திரவமாக்கி அவற்றை எரிபொருளாக பயன்படுத்தும் கிரயோஜெனிக் தொழில்நுட்பத்தில் நம்பி நாராயணன் பணியாற்றினார். திரவ எரிபொருள் தேவையை முன்கூட்டியே கணித்த நம்பி நாராயணன் முதல் திரவ உந்து மோட்டாரை 1970களின் தொடக்கத்தில் உருவாக்கினார்.
இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாட்டு அதிகாரிகளுக்கு வழங்கியதாக நம்பி நாராயணன் மீது, 1994ஆம் ஆண்டு புகார் எழுந்தது. நம்பி நாராயணன் பல்வேறு சட்டப்போராட்டம் நடத்திய பிறகு, அவர் மீதான குற்றச்சாட்டை 1996ஆம் ஆண்டு சிபிஐ தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து 1998 ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் நம்பி நாராயணன் நிரபராதி எனத் தீர்ப்பளித்தது.
பின்னர் மீண்டும் இஸ்ரோவில் சேர்ந்து நம்பி நாராயணன் பணிகளை செய்து வந்தார். உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்பட்டதால் 1999ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையம் மூலமாக கேரள அரசிடம் இழப்பீடு கோரினார். இதனையடுத்து 2001ஆம் ஆண்டு கேரள அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கியது. பின்னர் அதே ஆண்டு இஸ்ரோவில் இருந்து நம்பி நாராயணன் ஓய்வு பெற்றார்.