யார் இந்த கல்கி பகவான் ?

யார் இந்த கல்கி பகவான் ?
யார் இந்த கல்கி பகவான் ?

1989-ஆம் ஆண்டு, தாம் விஷ்ணுவின் அவதாரம் எனக் கூறிய ஒருவர், தனது பெயர் கல்கி பகவான் என அறிவித்துக்கொண்டார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள நத்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார்தான், தம்மை கல்கி பகவான் என்றும் உலகை காக்க வந்தவர் என்றும் கூறியவர். சிறு வயதிலேயே குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்து விட்டதால் விஜயகுமார் படித்தது வளர்ந்தது எல்லாம் அங்குதான். 

தொடக்கத்தில் எல்.ஐ.சி. முகவராக இருந்த விஜயகுமாரை, தத்துவ ஞானி ஜே.கே.வின் கருத்துகள் ஈர்த்தன. அவரது தியானக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த விஜயகுமாருக்கு ஆந்திராவில் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகுதான் விஜயகுமார் கல்கி பகவானாகவும் அவரது மனைவி புஜ்ஜம்மா அம்மா பகவானாகவும் மாறினர். புஜ்ஜம்மா தம்மை பத்மாவதி தாயாரின் அவதாரம் எனக் கூறிக்கொண்டார். தொடக்கத்தில் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நேமம் கிராமத்தில் தனது ஆசிரமத்தை தொடங்கினார் கல்கி பகவான். 

பின்னர் நாடு முழுவதும் கிளை பரப்பிய கல்கி பகவானின் ஆசிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதையபாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கல்கி பகவானை தனிப்பட்ட முறையில் பார்க்க 50 ஆயிரம் ரூபாயும், அம்மா பகவானை பார்க்க 25 ஆயிரம் ரூபாயும் கொடுக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள், வெளிநாட்டவர் உள்பட பலர் கல்கி பகவானின் பக்தர்களாக, ஆசிரமத்துக்கு பணம் கொட்டத் தொடங்கியது. 

ஆந்திராவில் மட்டும் 5 ஆயிரம் ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் சொத்துகள், ஒன்னெஸ் என்ற பெயரில் பல்கலைக்கழகம் என கல்கி பகவான் ஆசிரமத்து சொந்தமாக ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ‌கல்கி பகவானின் மகன் கிருஷ்ணா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் தொழில் செய்து வரும் கிருஷ்ணாவுக்கு பெங்களூருவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கட்டுமான‌ நிறுவனம் உள்ளது. 

கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் கிருஷ்ணாவின் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாகப் புகார் எழுந்ததை அடுத்து ஆந்திரா, சென்னை உள்பட நாடு முழுவதும் அவர்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கல்கி பகவான் ஆசிரமத்தில் பக்தர்களுக்கு போதைப்பொருள்கள் வழங்கப்படுவதாக எழுந்த புகார் ஓய்ந்துள்ள நிலையில் அங்கு வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com