திடீரென ராஜினாமா செய்த துணை குடியரசுத்தலைவர்; அதிர்ச்சியில் பாஜக! யார் இந்த ஜெகதீப் தன்கர்?
தன்கர், அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் சமமாக விமர்சித்தார். இது பாஜகவைச் சேர்ந்த ஒருவரின் வார்த்தைகள் அல்ல. தன்கர் தனது ராஜினாமா முடிவை அறிவித்தபோது காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை. நாட்டின் இரண்டாவது மிக உயரிய அரசமைப்பு பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தது பாஜகவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனில் அப்படி என்னதான் செய்தார் அவர் பார்க்கலாம்...
வளமான கலாச்சார பாரம்பரியமும் கட்டடக்கலையும் கொண்ட ராஜஸ்தான் மாநிலமே ஜெகதீப் தன்கரின் பிறப்பிடம். அங்குள்ள ஜுன்ஜுனு மாவட்டத்தில் கோகல் சந்த்-கேசரிதேவி தம்பதிக்கு 1951இல் பிறந்த தன்கர், தொடக்கத்தில் ஆங்கிலப் பள்ளியிலும், பின்னர் அரசுப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இவரது தந்தை சாதாரண விவசாயி. ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டம் பெற்று தனது 20 வயதில் 1979ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநில பார்கவுன்சிலில் பதிவு செய்தார்.
நீண்ட காலமாக வழக்கறிஞராக பணி செய்துவந்த தன்கர் 1990ஆம் ஆண்டில்தான் உயர்நீதிமன்ற வழக்கறிஞரானார். இந்தியாவில் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி அனுபவம் பெற்ற தன்கர், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராகவும் பணியாற்றிவர். இப்படி வழக்கமான பதவி உயர்வுகள் இருந்தாலும்... அரசியலில் குதித்த பின்னரே தன்கரின் வாழ்க்கைப் பயணம் சூடுபிடிக்கத் தொடங்கியது. ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ் அதைத் தொடர்ந்து பாஜகவிற்கு தாவிய தன்கர், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.
2003 இல் பாஜகவில் இணைந்த தன்கரின் அரசியல் பயணம் சீரான வளர்ச்சியைக் கண்டது. 2008 சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக பிரச்சாரக் குழு உறுப்பினராக இருந்த தன்கர், 2016 இல் பாஜகவின் சட்ட விவகாரத் துறைக்குத் தலைமை தாங்கினார். அதைத் தொடர்ந்து கடந்த 2019இல் மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது, மாநில அரசுக்கும் தன்கருக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வந்தது.
மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோதே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். குடியரசு துணைத் தலைவர் தேர்தலில், மொத்தம் 528 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவை 346 வாக்குகள் வித்தியாசத்தில் தன்கர் தோற்கடித்தார். 30 ஆண்டுகளில் ஒருவர் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பெற்ற அதிகபட்ச வெற்றி வாக்குகள் அதுவாகவே இருந்தது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் நீதிபதி ஒருவர் பங்கேற்றபோதும், மற்றொரு உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுகட்டாக பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தின்போதும், நீதித் துறை ஊழல் விவகாரம் வருத்தமளிப்பதாக தன்கர் தெரிவித்திருந்தார். மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர், ஆளுநர் முடிவெடுக்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்த விவகாரத்தை தன்கர் கடுமையாக விமர்சித்தார். ஒரு மாநிலத்தை கைப்பற்ற அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி மொழியை அழிப்பதே சிறந்த வழி என தன்கர் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில், உடல்நலக் குறைவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் தன்கர்.