மத்திய அரசின் பணமதிப்பிழப்பை 'சட்டவிரோதம்' என்ற ஒரே நீதிபதி பி.வி. நாகரத்னா யார் தெரியுமா?

மத்திய அரசின் பணமதிப்பிழப்பை 'சட்டவிரோதம்' என்ற ஒரே நீதிபதி பி.வி. நாகரத்னா யார் தெரியுமா?
மத்திய அரசின் பணமதிப்பிழப்பை 'சட்டவிரோதம்' என்ற ஒரே நீதிபதி பி.வி. நாகரத்னா யார் தெரியுமா?

நேற்றைய தினம் பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, அதிரடி தீர்ப்பை வழங்கி, இந்தியா முழுவதும் இன்று பேசுபொருளாகியிருக்கிறார் உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா. யார் இவர்? எங்கிருந்து வந்தவர்? இதற்கு முன் இவர் செய்த அதிரடி சம்பவங்கள் என்ன? இதை இக்கட்டுரையில் காண்போம்!

கடந்த 2016-ம் ஆண்டில் நவம்பர் 8ஆம் தேதி, கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ளவும் பண மதிப்பிழப்பை அறிவித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்படி அன்று முதல் இந்தியாவில் வழக்கத்திலிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டது. மக்கள் கையில் அன்றுவரை அந்த பணம் புழக்கத்தில் இருந்ததால், அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் சமர்ப்பித்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்தது.

ஆனால் போதுமான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாத காரணத்தால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர். பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து பலர் உயிரிழந்தனர். பலருடைய திருமணங்கள் நின்று போயின. பாமர மக்கள், அரசின் அறிவிப்பு தெரியாததால், சிறிது சிறிதாக சேமித்த பணத்தை வீட்டில் பல மாதங்களுக்கு அப்படியே வைத்திருந்த சம்பவங்களும் நடந்தது. காலத்தின் ஓட்டத்தில், கிட்டத்தட்ட ஓரு ஆண்டுக்குப் பின் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு திரும்பினர். இருப்பினும் முழுமையாக அந்த பாதிப்பிலிருந்து இன்றுவரை பலர் மீளவில்லை.

இதனால் அரசின் இந்த திடீர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கையால், அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டது. அந்த நீதிபதிகள் எஸ்.ஏ.நசீர், பி.ஆர்.காவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோராவர்.

இவ்வழக்கின் விசாரணைகள் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நடந்து வந்த நிலையில், வழக்கில் நேற்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அப்போது ஐந்து நீதிபதிகளில், அமர்வின் ஒரே பெண் நீதிபதியான நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு தவறு எனும் வகையில், அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தார். மற்றவர்கள் அனைவரும், அரசின் இந்நடவடிக்கை தவறேன கூறிய நேரத்தில் நீதிபதி பி.வி. நாகரத்னா தனது தீர்ப்பில் "ஒரே அரசாணை மூலம் 1000, 500 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தது தவறு. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ரகசியமாக செய்ய வேண்டுமென மத்திய அரசு கருதியிருந்தால், அதை அவசரச் சட்டம் மூலம் நிறைவேற்றி இருக்கலாமே? இத்தகைய தீவிர நடவடிக்கையில் நாடாளுமன்றத்தை நாடாமல், இதுகுறித்து முடிவு எடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்டவிரோதமானத" என்றுள்ளார்.இப்படி மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பளித்ததன் காரணமாக, நீதிபதி நாகரத்னா தற்போது இந்திய அளவில் பேசுபொருளாகியிருக்கிறார். இதனால் யார் இந்த நீதிபதி நாகரத்னா என தெரிந்துக்கொள்ள பலரும் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.

அக்டோபர் 30, 1962-ல், இந்திய முன்னாள் தலைமை நீதிபதி இ.எஸ். வெங்கட்ராமையா என்பவருக்கு மகளாக பிறந்தவர், நாகரத்னா. நீதிபதி இ.எஸ். வெங்கட்ராமையா என்பவர், 1989-ல் சுமார் ஆறு மாதங்களுக்கு இந்திய தலைமை நீதிபதியாக இருந்தவர். அவருடைய மகளான இவர், தந்தை வழியில் தானும் சட்டம் படித்தார். அதன்பின் பெங்களூருவில் வழக்கறிஞராக தன் வாழ்வை தொடங்கினார். பெங்களூரு நீதிமன்றத்தில் அரசியலமைப்பு, வணிகம் தொடங்கி காப்பீட்டு சட்டம், சேவை சட்டம், நிர்வாக மற்றும் பொது சட்டம், குடும்ப சட்டம், நிலம் மற்றும் அதன் வாடகை தொடர்பான சட்டங்களின் கீழ் வரும் வழக்குகளில் ஆஜராகி பயிற்சி பெற்று வந்தார்.

பின்னர் பிப்ரவரி 2008-ல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியானார். அதன்பின் 2010-ல் அங்கேயே இரண்டு வருடங்களில் நிரந்தர நீதிபதியாக பணியமர்த்தப்பட்டார். இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 2021-ல் உச்சநீதிமன்ற நீதிபதியானார். மூப்பு அடிப்படையில், நீதிபதி நாகரத்னா 2027- ம் ஆண்டில் ஒரு மாதத்துக்கும் மேலாக இந்திய தலைமை நீதிபதியாக இருப்பார் என சொல்லப்படுகிறது. அப்படி அவர் பொறுப்பேற்றால், இந்திய அரசியலமைப்பு இயற்றப்பட்ட இத்தனை ஆண்டுகளில், இந்திய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் முதல் பெண் நீதிபதியாக இவரே இருப்பார்!இப்படி வருங்காலத்தில் வரலாறு படைக்கப்போகும் இந்த நீதிபதி நாகரத்னா, அதிரடி தீர்ப்புகளை வழங்குவதில் புகழ்பெற்றவர். அவற்றில் சில...

* 2009 நவம்பரில் ஒருமுறை… அப்போது கர்நாடக உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக இருந்த நாகரத்னா மற்றும் அவருடன் பணியாற்றிய கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சில வழக்கறிஞர்கள் குழுவால் ஒரு அறைக்குள் அடைக்கப்பட்டனர். அந்த அறையிலிருந்து வெளிவந்தபின்னர் ஊடகங்களிடம் பேசுகையில், “இன்று நடந்த இவ்விஷயத்தில், எங்கள் யாருக்கும் கோபமில்லை. ஆனால் இவ்விஷயத்தை வழக்கறிஞர்கள் குழு எங்களிடம் செய்ததுதான் வருத்தமாக இருக்கிறது. வெட்கித் தலை குனிய வேண்டும்” என்று கூறி அதிரடி காட்டினார்.

* கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இவர் இருந்தபோது, கல்விக் கொள்கை தொடர்பான சில முக்கிய வழக்குகளுக்கு இவர்தான் தீர்ப்பு கூறினார். இவர் தலைமையிலான பெஞ்ச், அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான வரைவு வரைபடத்தை சமர்ப்பிக்குமாறு நிபுணர்கள் குழுவுக்கு உத்தரவிட்டது அதில் மிக முக்கியமானது.* 2012-ல் ஒளிபரப்பு ஊடகங்களை நெறிபடுத்துவதுபற்றி ஒரு தீர்ப்பு கூறினார் இவர். அப்போது, "உண்மையான தகவல்களை மட்டுமே சொல்வதென்பது, எந்தவொரு சேனலுக்கும் இன்றியமையாத விஷயம். இருப்பினும் பரபரப்பை ஏற்படுத்தவேண்டுமென்ற நோக்கத்தில் 'பிரேக்கிங் நியூஸ்', 'ஃப்ளாஷ் நியூஸ்' அல்லது வேறு எந்த வடிவத்திலும் செய்தியை பரபரப்பானதாக அவர்கள் மாற்றுவதை அரசு கட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்றார். தீர்ப்பின் முடிவில், ஊடகங்களை கண்காணிக்க குழுவொன்றை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்தினார்.

* இதைத்தொடர்ந்து, 2019-ல் கர்நாடகாவில் கோயில் பணியாளர்கள் சிலர் கருணை அடிப்படையில் பணம் பெற்றது வழக்காக மாறியபோது, ` கோயில் என்பது வணிக நிறுவனம் அல்ல. எனவே, கோயில் பணியாளர்கள் கிராஜுவிட்டி சட்டத்தின் கீழ் கருணைத்தொகை பெற உரிமை இல்லை என்று தீர்ப்பளித்தார். இருப்பினும் அவர்கள் கர்நாடக இந்து மத நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை சட்டம் மூலம் தங்களுக்கு தேவையான வசதிகளை பெறலாம் என தீர்ப்பளித்தார்

* கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட, மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு ஆன்லைன் வகுப்புகளை இந்தியாவின் மூலை முடுக்கில் இருக்கும் குழந்தைக்கும் கிடைக்க வேண்டுமென சில விஷயங்களை செய்தார். குறிப்பாக, ஆன்லைன் வகுப்புகளை பரந்த அளவில் அணுகுவதை உறுதி செய்ய மாநில அரசாங்கத்தை வழிநடத்துவதற்கான தீர்ப்புகளை இவர் கூறியதற்காக பாராட்டப்பட்டார். கொரோனா காலத்தில் அவரின் நோக்கம் ஒன்றேயொன்றுதான். அது, "நாட்டில் தொற்றுநோய் இருக்கிறதோ... இல்லையோ… குழந்தைகளின் கல்வி தொடர வேண்டும்" என்பது.

இதேபோல கொரோனாவின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்துக்கு திரும்புவதற்கு எதிர்கொண்ட நெருக்கடியையும் அவர் கண்காணித்தார். அதன் அடிப்படையில் 30 மே 2020 அன்று, அந்தந்த மாநிலங்களுக்குத் திரும்பாத 6,00,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரின் போக்குவரத்தை எளிதாக்குவதற்கான அதன் “முறையான திட்டத்தை” பதிவு செய்யுமாறு மாநில அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தார். ஓகா என்ற முதன்மை நீதிபதியோடு இணைந்து, ஷர்மிக் ரயில்களில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, நீரை உறுதிசெய்யவும் உத்தரவிட்டார். இதனால் பல்வேறு புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை சற்று முன்னேறியது.

2020 ஆம் ஆண்டு விவாகரத்து வழக்கொன்றின் போது, இந்திய சமூகத்தின் ஆணாதிக்க வழியை எதிர்த்து இவர் கூறிய விஷயங்களில் மிகமிக முக்கியமானது. அவர் தனது உத்தரவில் கூறியிருந்தது என்னவெனில், “நம் மக்கள் எப்போதும் பெண்களுக்கு தாங்கள் அதிகாரத்தை வழங்குவதாகச் சொல்வார்கள். ஆனால் அப்படி அதிகாரம் பெற்ற பெண்ணை எப்படி நடத்துவது என்பது இந்த சமூகத்திற்குத் தெரியாது. அதிகாரம் பெற்ற பெண்ணை எப்படி நடத்த வேண்டும் என்பதை பெற்றோர்கள் தங்கள் மகன்களுக்கு கற்பிப்பதில்லை. அதுதான் ஆண்களிடம் இருக்கும் பிரச்சனை. இருக்கட்டும், அவர்களுக்கு நான் அதை சொல்கிறேன்” என்று அதிரடியாக பேசினார்.இப்படி இன்னும் பல்வேறு அதிரடி சம்பவங்களை செய்த இவர், இவற்றையெல்லாம் தொடர்ந்து, 2021-ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிபெற்றார். அதன்பின்னும் பல விஷயங்கள் பேசியிருக்கும் அவர், இன்று 2023-ல் பண மதிப்பிழப்பு வழக்கில் மத்திய அரசுக்கு எதிரான தீர்ப்பை வழங்கி மீண்டுமொருமுறை பேசுபொருளாக மாறியுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com