விமானப்படை புதிய தலைமை தளபதி.. இன்று பதவியேற்பு!! யார் இந்த அசுதோஷ் தீட்சித்?
இந்திய விமானப்படையின் தற்போதைய தலைமைத் தளபதியாகப் பொறுப்பு வகித்து வரும் ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங்கின் (Amar Preet Singh) பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, இந்திய விமானப்படையின் புதிய தலைமைத் தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித்தை (Ashutosh Dixit) நியமித்து மத்திய அரசு கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, தற்போது விமானப்படையின் துணைத் தலைமைத் தளபதியாகப் பணியாற்றி வரும் அசுதோஷ் தீட்சித், இந்திய விமானப்படையின் 29-வது தலைமைத் தளபதியாக இன்று பிற்பகல் பொறுப்பேற்கவுள்ளார். இந்தச்சூழலில், அசுதோஷ் தீட்சித் கடந்து வந்த பாதை குறித்துப் பார்க்கலாம்.
1966-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி பிறந்த அசுதோஷ் தீட்சித், 1986-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்ற இவர், வங்கதேசத்தில் உள்ள பாதுகாப்புப் படைகளுக்கான கட்டளை மற்றும் பணியாளர் பயிற்சிக் கல்லூரி (DSCSC) மற்றும் இந்தியாவின் National Defence College ஆகியவற்றிலும் தனது உயர்கல்வியை முடித்துள்ளார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகால ராணுவப் பணியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள இவர், 3,500 மணி நேரத்திற்கும் அதிகமான விமானப் பயண அனுபவத்தைக் கொண்டவர். குறிப்பாக, மிராஜ் -2000, மிக் (MiG) ரக விமானங்கள் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் (Tejas) உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களை இயக்கிய அனுபவம் இவருக்கு உள்ளது.
மேலும், இவர் 1999-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சஃபேத் சாகர் (Operation Safed Sagar), ஆபரேஷன் ரக்ஷக் (Operation Rakshak) மற்றும் அண்மையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட முக்கிய ராணுவ நடவடிக்கைகளிலும் இவர் தொடர்புடையவராக இருந்துள்ளார். இதுதவிர, மேற்கு பிராந்தியத்தில் உள்ள முக்கியமான போர் விமானத் தளம் மற்றும் தெற்கு பிராந்தியத்தில் உள்ள போர் விமானப் பயிற்சித் தளம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார். மத்திய விமானப்படைக் கட்டளையின் தலைமை அதிகாரியாகவும், முப்படைகளின் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகளுக்கான தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
இவரது சிறப்பான சேவையைப் பாராட்டி 2006-ஆம் ஆண்டு வாயு சேனா பதக்கம், 2011-ஆம் ஆண்டு விஷிஷ்ட் சேவா பதக்கம் (Vishisht Seva Medal), 2023-ஆம் ஆண்டு அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் 2026-ஆம் ஆண்டு பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்திய விமானப்படையின் உச்சபட்ச தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ள அசுதோஷ் தீட்சித்தின் தலைமையில், விமானப்படையின் நவீனமயமாக்கல், உள்நாட்டு போர் விமானத் தயாரிப்பு மற்றும் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துதல் போன்ற பணிகள் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

