அமெரிக்காவின் அதீத வரி - இந்தியாவில் யாருக்கெல்லாம் பாதிப்பு?
அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் இந்தியாவின் 8 துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆடைகள் துறை மிகுந்த பாதிப்பை சந்திக்கிறது, 94 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வைரங்கள், நகைகள் துறை 87 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாவது அதிக பாதிப்பை எதிர்கொள்கிறது. மருந்து, மின்னணு பொருட்கள் துறைகள் விலக்கு பெற்றுள்ளதால் பாதிப்பு இல்லை.
அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் இந்தியாவில் 8 துறைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆண்டுக்கு 94 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதி செய்யும் ஆடைகள் துறை மிக அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. வைரங்கள், நகைகள் உள்ளிட்ட ஆபரண பொருட்கள் துறை 87 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கு ஏற்றுமதி செய்கிறது. இத்துறை 2ஆவது அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.
இயந்திரங்கள் துறையிலிருந்து 58 ஆயிரம் கோடிக்கும் வேளாண் விளைபொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்கள் 51 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இரும்பு உள்ளிட்ட உலோகங்கள் ஏற்றுமதி 40 ஆயிரம் கோடி மதிப்புக்கு நடைபெறுகிறது. இறால் உள்ளிட்ட கடலுணவுப் பொருட்கள் ஏற்றுமதி 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.
வேதிப்பொருட்கள் 23 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதியாகிறது. கைவினைப்பொருட்கள், தோல் பொருட்கள் ஏற்றுமதி 43 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இவை அனைத்தும் அதிக பாதிப்பை சந்திக்கின்றன. எனினும் மருந்து, மின்னணு பொருட்கள், பெட்ரோலியம் பொருட்கள் ஆகிய ஏற்றுமதித் துறைகளுக்கு விலக்கு உள்ளதால் பாதிப்பு இல்லாத நிலை உள்ளது.
தொழில் நகரங்களை பொறுத்தவரை திருப்பூர், நொய்டா, சூரத், ஜோத்பூர், விசாகபட்டினம் ஆகியவை அதிக பாதிப்பை எதிர் கொண்டுள்ளன. அதே நேரம் இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு சீனா, வங்கதேசம், வியட்நாம், துருக்கி, இந்தோனேசியா, மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு சாதகமாகியுள்ளது. ஏனெனில் இந்தியாவை விட இந்நாட்டு பொருட்களுக்கு அமெரிக்காவில் குறைவான வரியே விதிக்கப்படுகிறது.