தேர்தலில் வீழ்ந்த நட்சத்திரங்கள் யார்? வென்ற பிரபலங்கள் யார்?
விளையாட்டு மற்றும் திரைத்துறை நட்சத்திரங்களின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளன.
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு பாஜகவில் இணைந்த சில நாட்களில் கிழக்கு டெல்லியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. பாஜக தொண்டர்களின் களப்பணி பெரிதும் கைகொடுத்ததால் கவுதம் கம்பீர் 6, 96, 156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்தி நடிகையான ஹேமாமாலினி மீண்டும் தனது தொகுதியான மதுராவில் பாஜக சார்பில் போட்டியிட்டார். அங்கு அவர் 6, 71, 293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அண்மையில் பாஜகவில் இணைந்த நடிகர் சன்னி தியோன் சொந்த ஊரான குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டார். 5, 58, 791 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தேர்தலையொட்டி சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை ஜெயப்பிரதா, ராம்பூரில் போட்டியிட்டார். அவருக்கு கட்சியின் ஆதரவு இருந்தாலும் மக்களின் ஆதரவை பெறத் தவறினார். 4, 49. 180 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
நடிகர் அம்ரிஷின் மனைவியும் சுயேச்சை வேட்பாளருமான சுமலதாவும் மாண்டியா தொகுதியில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியை எதிர்த்து போட்டியிட்டு 7, 03, 660 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் சுயேச்சையாக மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிட்டார். பாஜக மற்றும் காங்கிரஸை கடுமையாக விமர்சித்த அவர், 28, 906 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
காங்கிரசில் இணைந்து சில நாட்களிலேயே வடக்கு மும்பை தொகுதியில் நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. 2, 41, 431 வாக்குகள் பெற்று அவர் தோல்வி அடைந்தார்.
தெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் 1, 64, 613 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.