சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது? - மத்திய அரசு நாளை ஆலோசனை

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது? - மத்திய அரசு நாளை ஆலோசனை
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது? - மத்திய அரசு நாளை ஆலோசனை

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மாநில, யூனியன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள், மாநில தேர்வு வாரியங்களின் தலைவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் காணொலி வாயிலாக நாளை உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தேர்வுகளை நடத்துவது பற்றி பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, கல்வி அமைச்சகம் மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகியவை ஆய்வு செய்து வருவதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

உயர் கல்வி நிறுவனங்களுக்கான தேர்வுகளின் தேதியை இறுதி செய்வது தொடர்பாக உயர் கல்வித்துறையும் ஆலோசித்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு துறைகள், குறிப்பாக கல்வித் துறையும், அதிலும் குறிப்பாக பொதுத்தேர்வுகளும் நுழைவுத் தேர்வுகளும் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, மாநில தேர்வு வாரியங்கள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட பெரும்பாலும் அனைத்து வாரியங்களும் 2021 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்துள்ளன. அதேபோல் தேசிய தேர்வு முகமை மற்றும் தேசிய தேர்வுகளை நடத்தும் இதர நிறுவனங்களும் தொழில் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளன.

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது மாநில வாரியங்களின் தேர்வுகள் மற்றும் இதர நுழைவுத் தேர்வுகளை நாடு முழுவதும் பாதிக்கக் கூடும் என்பதால் மாணவர்களின் நலனைக் கருதி, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் ஆலோசனைகளைப் பெற்று 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளன.

மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரின் கருத்துக்களையும் ட்வீட் வாயிலாக அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கோரியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com