கையெழுத்து கேட்டு அடம்பிடித்த வங்கி: பிணத்துடன் வந்தது குடும்பம்!

கையெழுத்து கேட்டு அடம்பிடித்த வங்கி: பிணத்துடன் வந்தது குடும்பம்!

கையெழுத்து கேட்டு அடம்பிடித்த வங்கி: பிணத்துடன் வந்தது குடும்பம்!
Published on

கணக்கு வைத்திருப்பவர் கையெழுத்து இல்லாமல் பணம் தரமுடியாது என்று வங்கி கூறியதையடுத்து பிணத்துடன் அங்கு வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. 

மகாராஷ்ட்ரா மாநிலம் தானே அருகில் உள்ளது உல்லாஸ் நகர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் காம்ப்ளே. டிசம்பர் மாதம் இவர் முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டார். கை, கால்கள் செயல்படவில்லை. இதனால் அருகிலுள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர். சிகிச்சை செலவுக்கு குடும்பத்தினரிடம் பணம் இல்லை. காம்ளேவின் வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் இருந்தது. கணக்கு உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு குடும்பத்தினர் சென்றனர். 

மானேஜரிடம் காம்ளேவின் நிலைமை பற்றிக் கூறினார். ஆனால் வங்கி அதிகாரிகள், ‘கையெழுத்து முக்கியம். அதில்லாம பணம் தர முடியாது’ என்று கூறிவிட்டனர். அவர்களிடம் போராடிப் பார்த்தது குடும்பம். ஆனால் எப்போது போனாலும் ஒரே பதிலை கூறி வந்தனர் வங்கி அதிகாரிகள். 

பின்னர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி மருத்துவச் செலவை கவனித்தது குடும்பம். இந்நிலையில் காம்ளேவின் சகோதரி, அவரை செல்போனில் புகைப்படம் எடுத்தார். வீடியோவும் எடுத்தார். அதை வங்கி அதிகாரிகளிடம் காண்பித்து, ’இப்பவாவது நம்பறீங்களா?’ என்று காண்பித்து, கணக்கில் இருந்தப் பணம் கேட்டார். அவர்கள், ‘நாங்க நேர்ல வந்து பார்க்கிறோம்’ என்றனர். ஆனால் வரவில்லை. பலமுறை வந்து பார்க்குமாறு கேட்டும், ‘வேலை இருக்கு. இன்னொரு நாள் பார்ப்போம்’ என்றே தட்டிக் கழித்தனர். 

இந்நிலையில் மேல் சிகிச்சைக்கு பணம் இல்லாத காரணத்தால் காம்ளே இறந்தார். கோபமான காம்ளேவின் உறவினர்கள் அவர் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றி நேராக அந்த வங்கிக்கிளைக்கு வந்தனர். ‘உங்களாலதான் காம்ளே இறந்தார். இப்பவா வது வந்து அவரை பார்க்கிறீங்களா?. உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா?’ என்று கடுமையாகச் சத்தம் போட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி காம்ளேவின் சகோதரி கூறும்போது, ‘நாங்கள் கேட்டபோதே, என் சகோதரனை மருத்துவமனையில் வந்து பார்த்து பணத்தைக் கொடுத்திருந்தால் அவர் பிழைத்திருப்பார். அவரை, இந்த வங்கிதான் கொன்று விட்டது’ என்று புகார் கூறினார்.

வங்கி தரப்பில் விசாரித்தபோது, ’கணக்கு வைத்திருப்பவர் கையெழுத்து இல்லாமல் மற்றவர்களிடம் பணத்தைக் கொடுக்க எங்களுக்கு அனுமதி இல்லை. இதனால் மனிதாபிமான அடிப்படையில் மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு கொடுக்க முடிவு செய்தோம். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார்’ என்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com