வாட்ஸ் அப்பில் சண்டை: அடித்துக் கொல்லப்பட்ட அட்மின்
ஹரியானாவில் வாட்ஸ்அப் குருப்பில் ஏற்பட்ட பிரச்னையில் குருப் அட்மின் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், ஹரியானா மாநிலம் சோனேபட் பகுதியை சேர்ந்த லவ் ஜோஹர், வாட்ஸ்அப் குருப் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதற்கு ஜோஹர் என்று பெயரிட்டுள்ளார். கோத்ரா இன மக்களுக்காக இந்த குருப்பை உருவாக்கியுள்ளார். இதில் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் உள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லவ் ஜோஹர் ஒரு போட்டோவை குரூப்பில் பதிவிட்டுள்ளார். அதுகுறித்து அவருக்கும் அந்த குருப்பில் இருந்த சிலருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. லவ் ஜோஹருடன், தினேஷ் என்பவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மற்றவர்கள் இவர்களை சமாதானம் செய்துள்ளனர். இந்நிலையில் தினேஷ் இச்சம்பவம் குறித்து பேசி தீர்வுக் காணலாம் என்று லவ் ஜோஹரை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அவரது பேச்சைக்கேட்ட லவ் தனது சகோதரர்களுடன் தினேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது தினேஷுடன் மேலும் சிலர் அவரது வீட்டில் இருந்துள்ளனர். சமாதானம் பேச சென்ற லவ் மற்றும் அவரது சகோதரர்களை கற்கள் மட்டும் கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் லவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலுக்குள்ளான அவரது சகோதரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.