தகவல் பகிர்தல் விவகாரம்.. வாட்ஸ் அப், பேஸ்புக்கிற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பயனாளர்களின் தகவல்களை பகிர்தல் தொடர்பான வழக்கில் பதிலளிக்குமாறு மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், வாட்ஸ் அப், பேஸ்புக் நிர்வாகங்கள் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாட்ஸ் அப் பயனாளர்களின் தகவல்களை பேஸ்புக் நிர்வாகத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி கர்மன்யா சிங் உள்ளிட்ட சட்ட மாணவர்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.எஸ்.கெஹர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி கே.எஸ்.கெஹர், உங்கள் தகவல்கள் திருடப்படுவதாக எண்ணினால், வாட்ஸ் அப் போன்ற தனியார் சேவை வழங்கும் நிறுவனங்களிலிருந்து வெளியேறலாம் என்று தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19ஆவது பிரிவின் படி குடிமகன்களின் உரிமயைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அரசின் அனுமதியின்றி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட செல்போன் உரையாடல் உள்ளிட்ட தகவல்களை மற்ற நிறுவனங்களுக்கு அளிப்பது சட்டவிரோதம் என்று தொலைதொடர்பு ஆணையத்தின் விதிகளில் தெளிவாக இருக்கிறது. எனவே அரசின் அனுமதியின்றி பயனாளர்களின் தகவலகளை வாட்ஸ் அப் நிறுவனம் பகிர்ந்துகொள்வது சட்டவிரோதமானது என்று வாதாடினார்.
இதையடுத்து மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசு, மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்கிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.