போலோ விளையாடிய சஞ்சய் கபூர்.. உயிரிழந்தது எப்படி... மருத்துவர் சொல்வது என்ன?
கோடீஸ்வர தொழிலதிபரும் சோனா காம்ஸ்டார் நிறுவனத்தின் தலைவருமான சஞ்சய் கபூர், போலோ விளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில், கடந்த ஜூன் 12ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெற்ற போலோ போட்டியின்போது மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய திடீர் மரணம், இந்தியாவின் பெருநிறுவன வட்டாரத்திலும் அதற்கு அப்பாலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையே, தேனீயை விழுங்கியதாகக் கூறப்படும் அனாபிலாக்டிக் அதிர்ச்சியால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆரம்பகால உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன. அதாவது, அவர் போலோ விளையாடும்போது, அவருடைய வாய்க்குள் தேனி ஒன்று புகுந்து அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், முன்னதாக அவர், நடுவரிடம் தனக்கு மூச்சுத் திணறுவதாகவும், தாம் எதையோ விழுங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் நடுவர்ககோ கபூரின் செய்திகளை மறுத்து, தேனீதான் தங்களைக் கொட்டியதாகக் கூறியுள்ளனர். இதற்கிடையே, குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் மூலம் அவரது மரணத்திற்கான முழுக் காரணம் மாரடைப்பு என்றே நம்புகிறார்கள். எனினும், அவருடைய உண்மையான மரணத்திற்கான காரணம் குறித்து தெளிவுபடுத்தும் இறுதிப் பிரேதப் பரிசோதனைக்காகக் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், அவருடைய இறப்புக்கான சாத்தியமான காரணங்கள் குறித்து மெடாந்தாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் நரேஷ் ட்ரேஹானுவிடம் NDTV கருத்து கேட்டது. அப்போது அவர், "தேனீ கொட்டினால் ஏற்படும் அனாபிலாக்டிக் எதிர்வினையாக இது நிகழலாம். இருப்பினும் இது மிகவும் பொதுவானது அல்ல. தேனீ அவரது வாயில் சென்றதா, அதனால் பிரச்சினை ஏற்பட்டதா அல்லது மூச்சுத் திணறல் அல்லது போலோ விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. இறப்புக்கான காரணம் குறித்து பிரேதப் பரிசோதனை அறிக்கை மூலமே தெரிய வரும்” எனத் தெரிவித்துள்ளார்.