பக்ரா- பியாஸ் போன்று காவிரிக்கும் மேலாண்மை வாரியம்?

பக்ரா- பியாஸ் போன்று காவிரிக்கும் மேலாண்மை வாரியம்?

பக்ரா- பியாஸ் போன்று காவிரிக்கும் மேலாண்மை வாரியம்?
Published on

காவிரி வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், மத்திய அரசின் சார்பில் பஞ்சாப்பில் உள்ள பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தை போன்று ஒன்றை அமைக்க மத்திய அரசு வரைவு வழங்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கில், விரிவான செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தொடர்ந்து அவகாசம் கோரி வந்தது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்று வருவதால் திட்டத்திற்கு ஒப்புதல் பெற இயலவில்லை என மத்திய அரசின் சார்பில் கூறப்பட்டது. கடந்த 3ஆம் தேதி நடந்த விசாரணையின்போது, மே 14ஆம் தேதி, காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டிருந்தது. கர்நாடகாவில் தேர்தல் முடிந்துவிட்ட காரணத்தினால், இன்று நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு, காவிரி வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த வரைவுத் திட்டம் பஞ்சாப்பில் உள்ள ‘பக்ரா பியாஸ்’ மேலாண்மை வாரியத்தை போன்றதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப்பில் சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளே பக்ரா, நங்கல் ஆகும். இதனை நிர்வகிப்பதே பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம். 1966-ம் ஆண்டு பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. பக்ரா மற்றும் நங்கல் அணைகளை நிர்வகித்து வரும் இந்த அமைப்பு அவற்றிலிருந்து  பஞ்சாப், ஹரியானா, ஹிமாசல் பிரதேஷ், ராஜஸ்தான், டெல்லி, சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு அளிக்கப்படும் நீர் மற்றும் மின்சாரம் இவற்றை நெறிப்படுத்தி வருகிறது. சுமார் 135 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர் அளிக்கிறது இந்த மேலாண்மை வாரியம்.

ஒரு தலைவர், இரு உறுப்பினர்களை முழு நேரப் பணியாளர்களாகவும்  மத்திய அரசின் இரு உறுப்பினர்கள், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாசல் மாநிலங்களிலிருந்து தலா ஒரு உறுப்பினர்களையும் இதன் நிர்வாகம் (Board) கொண்டிருக்கிறது.

தற்போது பக்ரா- பியாஸ் போன்ற வாரியத்தை மத்திய அரசு அமைக்கும்பட்சத்தில் இரு மாநிலத்தில் உள்ள அணைகளை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மத்திய அரசின் கைக்கு சென்றுவிடும். எப்போது எந்த மாநிலத்திற்கு நீர் தேவை உள்ளது. எங்கு மழைப்பொழிவு குறைவாக உள்ளது என்பதை அறிந்து அதற்கேற்றவாறு இந்த வாரியம் நீர் மேலாண்மையை கட்டப்படுத்தும். அப்படி பார்த்தால் தமிழகத்தில் காவிரி ஆறு பாயும் அனைத்து அணைகளும் இந்த வாரியத்தின் கீழ் சென்றுவிடும். ஆனால் மத்திய அரசு இன்று உச்சநீதிமன்றத்தில் எதுபோன்றதொரு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய உள்ளது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com