சபரிமலை ஐயப்பன் கோயிலில் குறைக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை.. காரணம் இதுதான்!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 15 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் முன்பதிவு மூலமாக 70 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு தரிசன டிக்கெட் மூலமாக 20 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
இந்த நிலையில், மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம் வரும் 25ஆம் தேதி சபரிமலையை வந்தடைய உள்ளது. அதற்கு மறுநாள் மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட உள்ளது.
இதையடுத்து, இணையவழி மற்றும் நேரடி அனுமதி முறையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு முடிவெடுத்துள்ளது.
கூட்டநெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானத்தை அடையும் டிசம்பர் 25ஆம் தேதி 50ஆயிரம் பக்தர்களுக்கும், மண்டல பூஜை நடைபெறும் 26ஆம் தேதி 60ஆயிரம் பக்தர்களுக்கும் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். அன்றைய தினமே நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.