பிற மாநிலங்களைவிட அதிகரிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்.. கேரளாவை விரும்புவது ஏன்?
தென் மாநிலங்களில் கேரளாவிலேயே புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
தென் மாநிலங்களில் கேரளாவிலேயே புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கேரளாவில் நான்கில் ஒருவர் வெளிமாநிலத் தொழிலாளர். என்ன காரணம் என்பதை அலசலாம். கேராளாவில் உள்ள மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சம். இதில், 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர், அதாவது 26 சதவீதம் வெளிமாநிலத் தொழிலாளர்கள். தமிழகத்தில் இது 12 சதவீதமாகவும் கர்நாடகாவில் இது 10 சதவீதமாகவும் உள்ளது. கேரளாவைச் சேர்ந்த பல இளைஞர்கள் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் சென்றுவிடுவதால், அங்குள்ள அடிப்படை வேலைகளுக்கு ஆள்பற்றாக்குறை நிலவுகிறது. அந்த இடைவெளியை வடமாநிலத் தொழிலாளர்கள் நிரப்புகின்றனர்.
சொல்லப்போனால், கேரளாவின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் இன்று புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பிலேயே இயங்குகிறது. கட்டுமானத் துறையில் 90 சதவீதம் புலம்பெயர் தொழிலாளர்களே உள்ளனர். விவசாயம், உணவகங்கள், ஜவுளி ஆலைகள் மற்றும் மீன்பிடித் தொழிலில் முக்கியப் பங்காற்றுகின்றனர். கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. மேற்கு வங்கம், அசாம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்கள் கேரளாவுக்கு வருகின்றனர்.
தொழில் துறை வளர்ச்சியில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுடன் கேரளா பின்தங்கி இருந்தாலும், வெளிமாநில தொழிலாளர்கள் கேராளவை நோக்கிச் செல்வதற்கு முக்கியக் காரணம் உண்டு. இந்தியாவிலேயே அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கும் மாநிலமாக கேரளா உள்ளது. உதாரணமாக, வடமாநிலங்களில் ஒருநாளைக்கு 200 ரூபாய் முதல் 300 ரூபாய்வரை கிடைக்கும் வேலைக்கு, கேரளாவில் 600 ரூபாய் முதல் 1,000 ரூபாய்வரை கூலி கிடைக்கிறது.
அரசு தகவலின்படி, கேரளாவில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். கேரளா அரசு புலம்பெயர் தொழிலாளர்களை விருந்தினர் தொழிலாளர்கள் என்று அழைக்கிறது. அவர்களுக்கென காப்பீடு, மருத்துவ வசதி மற்றும் குழந்தைகளுக்கான கல்வித் திட்டங்களை செயல்படுத்துகிறது. இதுவும் அவர்கள் கேரளாவை நோக்கிச் செல்ல முக்கியக் காரணமாக உள்ளது. கேரளாவின் பொருளாதாரம் புலம்பெயர் தொழிலாளர்களைச் சார்ந்து இருந்தாலும், மொழி மற்றும் கலாசார வேறுபாடுகளால் இவர்கள் மீது அந்நியர் வெறுப்பு அதிகரித்து வருவது கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

