ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்த அதானி உதவியாளர்கள்.. 10% உயர்ந்த குழும பங்குகள்!
கௌதம் அதானியின் உதவியாளர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளைச் சந்தித்ததாக வெளியான தகவல்களால் பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் 10 சதவீதம் வரை உயர்ந்தன.
இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, ரூ.2,239 கோடி (டாலர் 265 மில்லியன்) லஞ்சம் கொடுக்க கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்தது. இதுதொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் அதானி குழுமத்தின் நிறுவனர் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது முன்னாள் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், அதானி குழுமம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
மேலும் தொடர்ச்சியாக, எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என அமெரிக்க குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்ததில் தெரியவந்ததாக அதானி கிரீன் நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலையில், கௌதம் அதானி குழும பிரதிநிதிகள் ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளைச் சந்தித்து, அவர் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யக் கோரியதாக தகவல்கள் வெளியாகின. இதனால், அந்நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.