மீண்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார் நீதிபதி பி.வி.நாகரத்னா! எந்த வழக்கில் என்ன தீர்ப்பு?

மீண்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார் நீதிபதி பி.வி.நாகரத்னா! எந்த வழக்கில் என்ன தீர்ப்பு?
மீண்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார் நீதிபதி பி.வி.நாகரத்னா! எந்த வழக்கில் என்ன தீர்ப்பு?

மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை அரசாங்கத்தின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். அப்போது இதுகுறித்து, சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்.பி., அசம் கான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவருடைய இந்தக் கருத்துக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தன.

இந்த நிலையில், "மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை கூறுவதற்கு விதிகள் ஏற்படுத்த வேண்டும்” என உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ”கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பல சர்ச்சைக்குரிய மற்றும் அவதூறான கருத்துகளையும் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது நாடாளுமன்றத்திலும் தொடர்கிறது. எனவே அவர்களுக்கு சில வரைமுறைகளையும், விதிகளையும் இயற்ற வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு, அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் கருத்துச் சுதந்திரம் தொடர்பானது என்பதால், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டது. அதன்படி நீதிபதிகள் எஸ்.ஏ.நஷீர், பி.ஆர்.காவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜனவரி 3) விசாரணைக்கு வந்தது.

இதில் நான்கு நீதிபதிகள், "பேச்சுரிமையை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் விதிகள் எதுவும் தேவையில்லை. அரசியல் சாசனத்தின் 19 (1), 19 (2) பிரிவுகளின்கீழ் கருத்துச் சுதந்திரத்துக்கு, எந்த அளவுக்கு எல்லைகள் வரையறுக்கப்பட்டிருக்கிறதோ, அதுவே மக்கள் பிரதிநிதிகளாகிய அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பொருந்தும். அவர்களுக்கென கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது.

தற்போது பேச்சுரிமை தொடர்பாக நடைமுறையிலிருக்கும் கட்டுப்பாடுகளே போதுமானதாக இருக்கிறது எனக் கருதுகிறோம். அதேபோல மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை அரசாங்கத்தின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் கருத்துகளுக்கும் அவர்கள் விடும் அறிக்கைகளுக்கும் அவர்கள்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளனர்.

”பேச்சுரிமை என்ற பெயரில் இழிவான, அவதூறான கருத்துகளை மக்கள் பிரிதிநிகள் பயன்படுத்தினால் அரசாங்கம் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய செயலை அனுமதிக்கக் கூடாது" என நீதிபதி பி.வி.நாகரத்னா மாறுபட்ட தீர்ப்பை அளித்திருக்கிறார். இதே நீதிபதிதான் பண மதிப்பிழப்பு தொடர்பாக நேற்று (ஜனவரி 2) வழங்கப்பட்ட தீர்ப்பில், மத்திய அரசுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com