'சமஸ்கிருதம் தேசியமொழி': அஜய் தேவ்கன், சுதீப்பின் இந்தி சர்ச்சையில் கங்கனா ரனாவத் கருத்து

'சமஸ்கிருதம் தேசியமொழி': அஜய் தேவ்கன், சுதீப்பின் இந்தி சர்ச்சையில் கங்கனா ரனாவத் கருத்து
'சமஸ்கிருதம் தேசியமொழி': அஜய் தேவ்கன், சுதீப்பின் இந்தி சர்ச்சையில் கங்கனா ரனாவத் கருத்து

இந்தி மொழி குறித்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் மற்றும் கன்னட நடிகர் கிச்சா சுதீப் இடையே ட்விட்டரில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

தனது புதிய படமான 'தாகட்'டின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை கங்கனா ரனாவத், “சமஸ்கிருதம் நமது தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று நான் கூறுவேன், இந்தி, ஜெர்மனி, ஆங்கிலம், பிரஞ்சு போன்ற மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியவை. அப்படி இருக்கையில்  சமஸ்கிருதம் ஏன் தேசிய மொழியாகக் கூடாது? பள்ளிகளில் இது ஏன் கட்டாயமில்லை, இந்தி எங்கள் தேசிய மொழியாக இருந்தது, எப்போதும் இருக்கும். இந்தியை தேசிய மொழியாக ஏற்க மறுப்பது அரசியலமைப்பை மறுப்பது ஆகும்.



இன்று நாட்டிற்குள் நாம் ஆங்கிலத்தை தொடர்பு கொள்ள இணைப்பாகப் பயன்படுத்துகிறோம். அதுதான் இணைப்பாக இருக்க வேண்டுமா, அல்லது இந்தி அல்லது சமஸ்கிருதம் அல்லது தமிழ் இருக்க வேண்டுமா? இவற்றையெல்லாம் மனதில் வைத்து, ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும், தற்போதைய நிலையில், அரசியலமைப்பின் படி இந்திதான் தேசிய மொழி" என்று கூறினார்.

முன்னதாக, கன்னட நடிகர் கிச்சா சுதீப், இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று கூறியதையடுத்து டிவிட்டரில் சர்ச்சை வெடித்தது. இதற்கு இந்தியில் நடிகர் அஜய் தேவ்கான் எழுதிய ட்வீட்டில், "என் சகோதரரே, உங்கள் கருத்துப்படி இந்தி தேசிய மொழி இல்லை என்றால், உங்கள் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்து ஏன் வெளியிடுகிறீர்கள்? நமது தாய்மொழியாகவும் தேசிய மொழியாகவும் இந்தி எப்போதும் உள்ளது,இருக்கும். ஜன கன மன " என தெரிவித்தார். இதனை தொடர்ந்து பல தளங்களிலும் விவாதங்கள் எழுந்தன.



கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் சுதீப்பின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதுகுறித்து பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “சுதீப் சொன்னது சரிதான். மொழி அடிப்படையில் நமது மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு. நம் தாய்மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, அதையே சுதீப் கூறியுள்ளார். இதை அனைவரும் மதிக்க வேண்டும்,'' என்றார்



சுதீப்பின் கருத்துக்கு ஆதரவளித்த காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா, “இந்தி ஒருபோதும் நமது தேசிய மொழியாக இருக்காது. நம் நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மையை மதிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த மக்கள் பெருமைப்படக்கூடிய வளமான வரலாறு உண்டு. நான் ஒரு கன்னடனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” என ட்வீட் செய்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com