'உ.பி முதல்வரே... இது வெறுப்பின்றி, வேறென்ன?' - 'லவ் ஜிஹாத்' எதிராக 104 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

'உ.பி முதல்வரே... இது வெறுப்பின்றி, வேறென்ன?' - 'லவ் ஜிஹாத்' எதிராக 104 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
'உ.பி முதல்வரே... இது வெறுப்பின்றி, வேறென்ன?' - 'லவ் ஜிஹாத்' எதிராக 104 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

'லவ் ஜிஹாத்'-துக்கு எதிராக கடுமையான சட்டங்களை பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் இயற்றியுள்ளனர். அந்த வரிசையில் கடைசியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டம் இயற்றும் முன்பாகவே, ''தங்கள் மத அடையாளத்தை மறைத்துவைத்து பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். உங்கள் வழிகளைச் சரிசெய்து கொள்ளுங்கள். இல்லை, உங்கள் இறுதி பயணத்திற்கு தயாராக இருக்க வேண்டிவரும். கடுமையான சட்டத்தை கொண்டுவந்து அரசாங்கம் லவ் ஜிஹாத்தை நிறுத்தும்" என்று கூறி அதிரவைத்தார். இப்போது சட்டம் இயற்றிய பின்பு, பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இது புதிய சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

இதற்கிடையே, உத்தரப் பிரதேச அரசின் 'லவ் ஜிஹாத்' சட்டம் மிகவும் ஆபத்தானது எனக் கூறி ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ் என முன்னாள் சிவில் சர்வீஸ் ஊழியர்கள் 104 பேர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய இந்த சட்டம் 'லவ் ஜிஹாத்' என்ற பெயரில், மாநிலத்தை "வெறுப்பு, பிளவு மற்றும் மதவெறி அரசியலின் மையமாக" மாற்றிவிட்டது, போன்ற கடுமையான வாதங்களையும், கருத்துக்களையும் கொண்டு அந்தக் கடிதத்தை எழுதியுள்ள அரசு ஊழியர்கள், அந்த சர்ச்சைக்குரிய சட்டத்தை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தி யோகியை வலியுறுத்தியுள்ளனர்.

இந்த 104 பேரில் முக்கியமாக முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முன்னாள் வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் மற்றும் பிரதமரின் முன்னாள் ஆலோசகர் டி.கே.ஏ நாயர் உள்ளிட்ட முன்னாள் அரசு ஊழியர்கள் "சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும்" என்று கோரியுள்ளனர்.

இதற்கிடையே, இந்த 104 பேரில் மற்ற மூவரான முன்னாள் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் வஜாஹத் ஹபீபுல்லா, முன்னாள் காவல்துறை அதிகாரி ஜூலியோ ரிபேரோ மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் மீனா குப்தா ஆகியோர் தாங்கள் ஏன் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறோம், உ.பி. முதல்வருக்கு கடிதம் எழுத வேண்டிய அவசியம் என்ன, 'லவ் ஜிஹாத்' ஏன் மிகவும் ஆபத்தானது என்பது தொடர்பாக The Quint இணையப் பத்திரிகைக்கு விளக்கியுள்ளனர்.

புதிய சட்டம் பல அரசியலமைப்பு கட்டளைகளுக்கு எதிரானது என்று கூறும் குப்தா, " 'கட்டாய மதமாற்றம்' இல்லாத இடத்திலும்கூட இந்த சட்டத்தைப் பயன்படுத்தப்படலாம்" என்று எச்சரிக்கிறார். மேலும், "இஸ்லாமிய விரோத உணர்வைத் தூண்டுவதற்கும், துன்புறுத்துதலுக்கும் ஒரு விசில் போல இந்தச் சட்டம் செயல்பட வாய்ப்பு இருக்கிறது. இது காவல்துறையினரால் மட்டுமல்ல, மாட்டிறைச்சி விவகாரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதுபோன்ற ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது" என்றும் குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல், இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட மொராதாபாத் தம்பதியினருக்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு நடந்த சம்பவத்தை உதாரணமாகக் கூறி, 'லவ் ஜிஹாத்' ஏன் ஆபத்தானது என்பதை விளக்குகிறார் ஹபிபுல்லா.

மொராதாபாத் மாவட்டத்தில் 'லவ் ஜிஹாத்' சட்டத்தின் கீழ் ரஷீத் என்ற 22 வயது இளைஞரும், அவரது சகோதரரும் அதிரடியாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். ரஷீத் இந்துப் பெண் பிங்கியை ஐந்து மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால்,  இந்தத் திருமணத்தை வலதுசாரி இயக்கமான பஜ்ரங் தளத்தினர், "லவ் ஜிஹாத்" என்று குற்றம்சாட்டி பெண்ணையும், ரஷீத் மற்றும் அவரின் சகோதரரையும் போலீஸிடம் ஒப்படைத்தனர். ஆனால் மணப்பெண் பிங்கி நீதிபதியிடம், "என் சொந்த விருப்பத்தின் பேரிலேயே ரஷீத்தை திருமணம் செய்துகொண்டேன். நானாகவே மதம் மாறினேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை" என சாட்சியம் அளித்தார்.

அதேபோல் வலுக்கட்டாயமாக அந்தப் பெண் மதம் மாற்றப்பட்டார் என்பதற்கான ஆதாரங்களை திரட்ட முடியாததை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த பிங்கிக்கு காப்பகத்தில் செலுத்திய ஊசியால் ஏழு வாரங்கள் கர்ப்பமாக இருந்த தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டது என பிங்கி குற்றச்சாட்டு சுமத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தை மேற்கோள் காட்டிய ஹபிபுல்லா, "லவ் ஜிஹாத் எவ்வாறு அச்சுறுத்தலாக இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டு, பிங்கிக்கு நடந்த கருச்சிதைவு" என்றார். மேலும், "லவ் ஜிஹாத் சட்டங்கள் முஸ்லிம்களை இந்த நாட்டின் குடிமகன்களாக இல்லாமல் ஆக்குவதற்கான முயற்சியாகும்" என்றும் கூறியுள்ளார்.

"சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து பதிவான அனைத்து வழக்குகளும் இந்து பெண்களைச் சாதாரணமாக சந்திக்க சென்ற முஸ்லிம் இளைஞர்கள், அவர்களை துன்புறுத்தியதாக பதிவு செய்யப்பட்டவைதான். வெறுப்பு இல்லையென்றால் இது மாதிரியான சம்பவங்கள் நடப்பது என்ன?" என்றும் ஹபிபுல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல் முன்னாள் காவல்துறை அதிகாரி ரிபேரோ, "இந்த சட்டத்தில் காவல்துறைக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்படுவது மிகவும் அச்சுறுத்தலான செயல். இது சிலசமயங்களில், குறிப்பாக அரசியல்வாதிகளுக்கு சில அரசியல் நோக்கங்கள் இருக்கும்போது அவர்கள் காவல்துறை மூலம் இதை பயன்படுத்தி கொள்வார்கள்" என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும், "மக்களைப் பிளவுபடுத்துவதற்கான குறிப்பாக நன்கு வடிவமைக்கப்பட்ட இந்தக் கொள்கை இந்தியாவில் நாங்கள் முதன்முறையாகக் கண்ட ஒன்று என்று நான் நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாக எனது கேரியரில், மக்களை ஒருவருக்கொருவர் எதிரிகளாக்க மாற்ற முயற்சிக்கும் இந்த மாதிரியான சட்டங்களை நான் பார்த்ததில்லை" என்றும் வேதனை தெரிவிக்கிறார் ரிபேரோ. இவர்களை போன்றே 104 சிவில் சர்வீஸ் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்கள் யோகி ஆதித்யநாத்தின் அரசை எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர்.

நவம்பர் 28-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த லவ் ஜிஹாத் என்று சொல்லப்படும் Prohibition of Unlawful Conversion of Religion Ordinance, 2020 சட்டம், சட்ட விரோத வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்று அரசு தரப்பில் வாதமாக முன்வைக்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் மூலம் திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் ஒருவருக்கொருவர் விருப்பம் தெரிவித்து மதம் மாறினாலும்கூட, திருமணத்திற்காக மதம் மாறுவதாக கூறி, இச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்படலாம். அப்படி கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவர் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற வாய்ப்புகள் உண்டு. இதற்கிடையே, சட்டம் நடைமுறைக்கு வந்து 24 மணி நேரத்தில் இரண்டு வழக்குகளும், 9 நாட்கள் ஆன நிலையில் 56 வழக்குகள் பதிவாகியது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Quint

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com