வெறுப்பு அரசியல் வன்முறைக்கே வழிவகுக்கும்.. வடமாநில தொழிலாளர்கள் பிரச்னைக்கு இது தீர்வல்ல!

வெறுப்பு அரசியல் வன்முறைக்கே வழிவகுக்கும்.. வடமாநில தொழிலாளர்கள் பிரச்னைக்கு இது தீர்வல்ல!
வெறுப்பு அரசியல் வன்முறைக்கே வழிவகுக்கும்.. வடமாநில தொழிலாளர்கள் பிரச்னைக்கு இது தீர்வல்ல!

நாளுக்குநாள் வடமாநிலத்தவரின் வருகை தமிழகத்துக்குள் அதிகரித்து வருகிறது. இப்படி, அவர்கள் தமிழகத்துக்குள் வருவதற்கு காரணம் என்ன, ஏன் அவர்களை அரசியல்வாதிகள் குறிவைக்கின்றனர், தமிழகத்தில் அவர்களின் நிலை என்ன, வெளிமாநிலங்களில் தமிழர்களின் நிலை என்ன, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிரந்தர தீர்வு என்ன? என அனைத்தையும் விளாசுகிறது இந்த தொகுப்பு.

வேலை தேடும் படலம்

ஒருவருக்கு மட்டும் சிறந்த வேலை அமைந்துவிட்டால், அவரது விலாசம் மட்டுமல்ல, தலைமுறைகூட மாறிவிடும். அது, இல்லாததால்தான் பலரும் பல்வேறு வேலையைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றனர். உலகம் முழுவதும் இந்த ’வேலை தேடும் படலம்’ நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அதிலும், சமீபகாலமாக மிகப்பெரிய நிறுவனங்களே பல்லாயிரம் பேரை வேலையிலிருந்து நீக்கி வருகிறது.

அண்டை மாநிலங்களில் தமிழர்கள்

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வல்லரசு நாடுகள் மட்டுமின்றி, வளைகுடா நாடுகளும் தங்கள் நாட்டைச் சார்ந்த குடிமக்களுக்கே வேலை வழங்க வேண்டும் என காலம்காலமாய்ப் போர்க்கொடி தூக்கி வருகின்றன. என்றாலும் தன் வறுமையைப் போக்கவும், வருமானத்தைப் பெருக்கவும் பலரும் பல நாடுகளுக்குப் பயணமாகின்றனர். அதிலும் குறைந்த சம்பளத்துக்குக் கொஞ்சம்கூட அனுபவம் இல்லாத வேலைகளில் போய்ச் சிக்கி அடிமையாய்க் கிடக்கின்றனர்.

வெளிநாடுகளில் போய் இந்தியர்கள் இப்படி வேலை பார்க்கின்றனர் என்றால், இந்தியாவில் உள்ளவர்கள் பிழைப்புக்காக தங்கள் சொந்த மாநிலத்தை விட்டுவிட்டு பிற மாநிலங்களுக்குப் படையெடுக்கின்றனர். ஏன், தமிழர்கள்கூட அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலும், வடமாநிலமான மகாராஷ்டிராவிலும் தலைநகர் டெல்லியிலும் போய் குடியேறி வேலை பார்த்து வருகின்றனர். அதேபோல்தான், வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் தமிழகத்தை நோக்கிப் படையெடுக்கின்றனர்.

புலம்பெயர்வது அடிப்படை உரிமை

இந்த நிலையில், வடமாநிலத்தவர்களுடைய சமீபத்திய வரவு தமிழகத்தில் அதிகரித்திருப்பதுதான் பேசுபொருளாகி வருகிறது. ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு புலம் பெயர்வது என்பது இந்திய அரசியல் சாசனப் பிரிவு 19(1)dஇன்படி அவர்களின் அடிப்படை உரிமையாகும். அரசின் உலக மயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் தாராள மயமாக்கல் கொள்கைகள் மூலம் பல்வேறு தொழில்கள் தொழிலாளர்களை ஈர்க்கத் தொடங்கியதால், புலம் பெயர்வது என்பது தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக உள்ளது.

தமிழகத்தில் 10.67 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்

இந்தியாவில் சுமார் 14 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாக உத்தேச மதிப்பீடுகள் கூறுகின்றன. எல்லா மாநிலங்களில் இருந்து மக்கள் புலம்பெயர்ந்தாலும்கூட, பெரும்பாலும் பின்தங்கிய பீஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து, வளர்ச்சியடைந்த தென்னக பகுதிகளுக்கு அதிகளவில் புலம் பெயர்கிறார்கள் என்பதுதான் வியப்பான விஷயம். தமிழகத்தைப் பொறுத்தவரை 2016 ஆய்வறிக்கையின்படி 10.67 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வடமாநிலத்தவர்களின் வருகை குறித்து கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எச்சரிக்கை விடுத்து வருகிறார். "பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் குடியேற்றம் அதிகம் நடந்துள்ளது. திட்டமிட்டு போர் தொடுக்கிறார்கள். இந்த நிலத்தின் அதிகாரம், அரசியலை அவர்கள் தீர்மானிக்கும் காலம் வரலாம். என்னை அதிகாரமற்ற, அரசியலற்ற, நிலமற்ற கூலிகளாக்கி அடித்து விரட்டலாம். அதுதான் இலங்கையில் நடந்தது. இங்கும் நடக்கலாம். வடஇந்தியர்களால்தான் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது” என்று கடந்த சில நாள்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

”இந்திகாரர்களை அடித்து வெளுத்து விரட்டுவேன்”

அதேநேரத்தில், சமீபத்தில் அவர் பேசியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர், “நாம் தமிழர் கட்சி மட்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திகாரர்களை அடித்து வெளுத்து விரட்டுவேன். அதன்பிறகு இந்திகாரர்கள் மீது கஞ்சா மற்றும் பாலியல் சம்பந்தப்பட்ட வழக்குகளை அவர்கள் மீது போட்டு சிறையில் தள்ளி சோறு போட மாட்டேன்.

இதைப் பார்த்து பயந்துபோய் இந்திகாரர்கள் ஓடி விடுவார்கள்” என சீமான் பேசியிருப்பதற்குத்தான் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வடஇந்தியர்கள், தமிழர்களால் தாக்கப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. அண்மையில் ரயிலில் சென்ற ஒருவர், வடஇந்தியரை கடுமையாக தாக்கிய சம்பவம் வீடியோவாக வைரலானதைத் தொடர்ந்து தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமாநில தொழிலாளர்களுக்கு இயக்குநர் ஆதரவு

இந்த நிலையில் சீமான் பேசியிருக்கும் கருத்துக்கு மறைமுகமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் நவீன், ”வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பது சரி. ஆனால் வடக்கிலிருந்து பிழைப்பு தேடி வரும் ஒடுக்கப்பட்ட பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைப்பது சரியான அரசியல் அல்ல. இந்த உலகம் அனைவருக்கும் பொதுவானது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதே தமிழர் அறம். அன்பு சமத்துவம் மட்டுமே தமிழர் தத்துவம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இவருடைய ட்விட்டர் பதிவுக்கும் நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். “நீங்கள் சொல்வது உண்மை மற்றும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. மற்றொன்று, நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது. உங்கள் சம்பளத்தை விட, பலமடங்கு குறைவாக உங்கள் வேலைக்கு ஆட்கள் கிடைக்கும்போது உங்களுக்கு அந்த வேலை கிடைக்குமா” என கார்த்திக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்குநர் நவீனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்த பயனர்கள்

மற்றொரு பயனரான சரவணக்குமார் என்பவர், “பாட்டாளி சகோதரர்கள் மீது வன்மத்தை விதைக்கவில்லை. வருகையை முறைப்படுத்தச் சொல்கிறார்கள். வாக்குரிமை வழங்கக்கூடாது என்கிறார்கள். வாக்குரிமை அளிப்பதால் ஏற்படக்கூடிய சிக்கலை பேசுகிறார்கள். உள்நுழைவுச் சீட்டு கொடுத்து சீர்செய்வதால் குற்றங்களைக் கண்டுபிடிக்க உதவியாக இருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இப்படி ட்விட்டரில் இருதரப்புக்கும் மோதல் வெடித்து வரும் நிலையில், அதிலும் சில பயனர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். “தென்மாநில மக்கள் பெரும்பாலும் கல்வியில் மேன்மை பெற்று நல்ல பல வேலைகளுக்குச் சென்றுவிட்டதால் உருவான வெற்றிடம், எளிய சிறிய வேலைகளுக்கும் வடக்கிலிருந்து ஆட்கள் வரும் நிலையை தவிர்க்க முடியாது” என உடோபியா என்பவர் பதிவிட்டுள்ளார். இவருடைய பதிவின்படி பார்த்தோமானால், உயர் கல்வி பெற்று மற்ற மாநிலங்களுக்கும், வேறு நாடுகளுக்கும் குடிபெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை தோராயமாக 50 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஆண்டுதோறும் உயர்கல்விக்காக ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்கள் இப்போதும் பயணிக்கின்றனர். இந்த ஒரு காரணம்தான், தமிழகத்தில் உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருப்பதுடன், வட இந்தியத் தொழிலாளர்களையும் தமிழ்நாட்டை நோக்கி நகர்த்தியிருக்கிறது.

உலகமெங்கும் தமிழர்களே பாதிப்பு

ஆனால், இந்தப் பிரச்சினை தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் விஸ்வரூபமெடுக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக தமிழர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர். கடந்த காலங்களில் மும்பையில் தமிழர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். கட்சி தொடங்கிய மூன்றே மாதத்தில், ’சிவசேனா தசரா பேரணி’ ஒன்றை நடத்திய மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, அந்த பேரணியில், தமிழர்களை அடித்து துரத்தும் நடவடிக்கைகளைத் தொடங்கினார். இதில் சாதாரண தமிழ் வியாபாரிகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

தமிழில் பெயர் பலகை வைத்திருந்த வணிகர்கள் அடையாளம் கண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் நுழைவாயிலான மும்பையில் மட்டும் இந்த வன்முறை நிகழவில்லை. அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் வரலாற்றுப் பக்கங்களில் மறைந்து கிடக்கின்றன. தமிழர்களைக் கொடூரமாகத் தாக்கியதுடன், அவர்களை “லுங்கிவாலாக்கள், கிரிமினல்கள், குண்டர்கள், சூதாடிகள்” எனக் குற்றம்சாட்டியது, பால்தாக்கரேவின் சிவசேனா.

அதேபோல், கடந்த 2016ஆம் ஆண்டு, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் வன்முறை வெடித்தது. அப்போது தமிழ் இளைஞர் ஒருவரை, கர்நாடகாவைச் சேர்ந்த சிலர் கடுமையாகத் தாக்கிய காட்சி இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கை விடுத்த வாட்டாள் நாகராஜ்

2019இல், ”மேகதாது அணைக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தால், தமிழர்கள் யாரும் கர்நாடகாவுக்குள் நுழைய முடியாது என்று கன்னட சலுவாலி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்திருந்தார். கேரளாவில், கடந்த 2011ஆம் ஆண்டு முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அம்மாநில மக்களால் தமிழர்கள் தாக்கப்பட்டதுடன், சொந்த ஊருக்கும் விரட்டியடிக்கப்பட்டனர். அதுபோல், ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவங்களும், புத்தூர் சுங்கச் சாவடியில் ஏற்பட்ட தகராறில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வுகளும் இங்கு நினைவுகூரத்தக்கவை.

அரசியல் லாபத்துக்கு அப்பாவி மக்கள் பலி

ஆக, இவர்கள் எல்லாம் பிழைப்பு தேடி வேறு மாநிலங்களுக்குச் சென்றவர்கள். ஆனால் அரசியலும் அரசியல்வாதிகளுமே அவர்களுடைய உயிர்களைக் காவு வாங்கின. ”தன்னுடைய அரசியல் லாபத்திற்காக பொதுநலப் பிரச்சினையை அப்பாவி மக்கள் மீது திணிப்பதுதான் பல அரசியல்வாதிகளுக்கு வாடிக்கையாக இருக்கிறது” என்கின்றனர், அரசியல் விமர்சகர்கள். மேலும் அவர்கள், “அரசியலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அப்பாவி மக்களை வேட்டையாடுவது நியாயமல்ல” என்கின்றனர். ஏற்கெனவே இதுபோன்று தமிழர்கள் விஷயத்தில் செய்த அரசியல்வாதிகளின் முகவரிகள் எல்லாம் மறைந்துபோய், இன்று அதே மாநிலங்களில் தமிழர்களின் வளர்ச்சியைக் காண முடிகிறது.

தமிழகத்தில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர்கள் எண்ணிக்கை

தமிழர்களை எதிர்த்த பிற மாநிலக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் தேர்தலில் தோற்ற வரலாறு உண்டு. உதாரணத்துக்கு, கர்நாடகாவின் வாட்டாள் நாகராஜே மண்ணைக் கவ்வினார். மும்பையில், சிவசேனா பிரிந்து கிடக்கிறது. ”இப்படி தமிழர்களின் தாக்குதல் சம்பவங்களே இன்னும் அழியாத சுவடுகளாய் அனைவரின் நெஞ்சங்களிலும் இருக்கும்வேளையில், பஞ்சம் பிழைக்க வந்த மனிதர்களைத் தாக்குவதும் அவர்களை விரட்டியடிப்பதும் மரபு அல்ல” என்பதுதான் அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

அதேநேரத்தில், தமிழகத்தில் வடஇந்தியர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் குடியேறும் வடஇந்தியர்களின் எண்ணிக்கை 2001ஆம் ஆண்டு 58.2 லட்சம் என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில், 2011ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 77.5 லட்சமாக உயர்ந்துள்ளது. 33.2 சதவீத அளவிற்கு வடஇந்தியர்கள் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் குடியேறி உள்ளனர்.

வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் குடியேற காரணம்

தென்மாநிலங்களில் நிலவும் அமைதியான சூழல், வேலைவாய்ப்பு, பொருளாதார வசதி, சாதிய பாகுபாடு, இயற்கைப் பேரழிவு, சுரண்டல், குறைவான கூலி, கல்வி போன்ற காரணங்களுக்காகத்தான் இவர்கள் தென் மாநிலங்களில் குடியேறி வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், விடுமுறை எடுக்காமல் பணிக்கு வருவது, கடின உழைப்பு போன்ற காரணங்களால் வடமாநிலத்தவரை வேலைக்கு எடுப்பதாக நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகின்றன.

”எப்படி, நம் தமிழர்கள் அண்டை மாநிலங்களுக்கு தேயிலை பறிக்கவும், மரங்கள் வெட்டவும் ஒருவருடைய தலைமையில் 10 அல்லது 20 பேர் கொண்ட குழு செல்கிறதோ அல்லது தனியாக செல்கின்றனரோ.... அதேபோலத்தான் இந்த வடஇந்தியர்களும் இங்கே பஞ்சம் பிழைக்க வருகின்றனர்” என்கின்றனர், அவர்களை வேலைக்கும் வைத்திருக்கும் நிறுவனத்தினர். ”இன்னும் சொல்லப்போனால், தமிழகம், கேரளாவில் உள்ளூர் வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலையில்தான் சிறு மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வடஇந்திய தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்திவருகின்றன” என்கின்றனர், அவர்கள்.

ஏமாற்றி அழைத்து வரப்படும் வடமாநிலத்தவர்

மேலும் இதுகுறித்து அவர்கள், “வடஇந்திய தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் கூலியில் பெரும் வித்தியாசம் உள்ளது. அவர்களுக்கு கிட்டத்தட்ட உள்ளூர்ப் பணியாளர்கள் பெறும் ஊதியத்தில் பாதியளவே ஊதியமாகக் கிடைக்கிறது. மேலும், பல புலம்பெயர் தொழிலாளிகள் ஏமாற்றித்தான் அழைத்து வரப்படுகிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு இவர்களை அழைத்துவரும் முகவர்கள், சரியான தகவல்களைச் சொல்லி அழைத்து வருவதில்லை.

இப்படி குடியேறிய வட இந்தியர்கள், கட்டுமானத் தொழில், ஓட்டல்கள், விடுதிகள் எனப் பலவற்றிலும் பணிபுரிந்து வருகின்றனர். தவிர, தெருவுக்குத் தெரு சொந்தமாய் பானிபூரி, பான் பீடா போன்ற கடைகளைப் போட்டும் வியாபாரம் செய்து வருகின்றனர். இன்னும் சில இளைஞர்கள் குல்பி ஐஸ், பஞ்சி மிட்டாய், கொசுவலை, ஜமுக்காளம் வியாபாரமும் செய்து பிழைத்து வருகின்றனர்” என்கின்றனர்.

பாதிக்கப்படும் வடமாநிலத்தவர்கள்

வடமாநிலத்தவர்களின் குடியேற்றம் தமிழகத்தில் விவாதப் பொருளாக மாறியிருந்தாலும், சென்னை, திருப்பூர், கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட நகரங்களில்தான் அதிகம் உள்ளனர். திருப்பூர் ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரத்தில், அவர்கள் பணிபுரியும் இடத்தின் சூழ்நிலை மற்றும் குடியிருப்பு வசதி குறைபாடுகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றால் பெருமளவு பாதிக்கப்படுவது வெளியுலகுக்குத் தெரிவதில்லை.

இதுகுறித்து மனித உரிமை ஆர்வலர்கள், “ஒரு தொழிலாளி மாநிலம்விட்டு மாநிலம் செல்லும்போது அவரின் உழைப்பு அதிகமாவதுடன், அவர் முழுத்திறனையும் வெளிப்படுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாக்கப்படுகிறார். உதாரணத்துக்கு, நம் தமிழரின் நிலையையே எடுத்துக்கொள்வோம். வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் நம் தமிழர்கள் அங்கு ஒட்டகம் மேய்க்கப்படுவதும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் உணவின்றி, உறங்க இடமின்றி அடிமைகளாய் வேலை செய்யும் அவலநிலை தொடர்வதும் ஊடகங்களில் செய்தியாக வருகின்றன. இப்படித்தான் வடஇந்தியர்களின் நிலையும் இங்கு உள்ளது” என்கின்றனர்.

அதேநேரத்தில், தமிழகத்தில் வேலைவாய்ப்பு காரணங்களுக்காக அவர்கள் தங்கி இருந்தாலும், அவர்களுக்குள் குழுவாகச் சந்தித்துக்கொள்வது, உரையாடுவது என்று அவர்கள் பண்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வதில் குறியாய் இருக்கிறார்கள். குறிப்பாக, இங்குள்ள மொழியை விரைவிலேயே கற்றுக்கொள்கின்றனர். இதன்காரணமாக, அவர்கள் இங்கு நீண்டகாலம் தங்குவதற்கு வசதி ஏற்படுத்தி தந்துவிடுகிறது.

மத்திய அரசுப் பணியில் வடஇந்தியர்கள் ஆதிக்கம்

பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணியில் சேர்ந்த வட இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகமாகத்தான் உள்ளது. கடந்த ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 சதவிகிதம் வரை வடஇந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் ரயில்வே, அஞ்சல், என்.எல்.சி, வங்கிகள் உள்ளிட்ட மத்திய அரசின் பொதுப்பணித் துறை நிறுவனங்களில் வடஇந்தியர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் திருச்சி கோட்டத்தில் மட்டும் கடந்த ஆண்டுகளில் 1,600 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது போதாகுறைக்கு நெய்வேலி என்.எல்.சியில் அந்த நிறுவனத்துக்காக நிலம் அளித்த மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல் வடஇந்தியர்களுக்கு அளிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

திருட்டு, கொள்ளை, பாலியல் சம்பவங்கள்

வளர்ந்த பிரதேசங்களை நோக்கிய மக்களின் நகர்வு உலகம் முழுவதும் வழக்கமானது என்றாலும், இங்கு வடஇந்தியர்கள் வருவதுதான் பிரச்சினையாக இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம், வடஇந்தியர்கள் வருகையால் தமிழகத்தில் வசிப்போரின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. மேலும், திருட்டு, வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்கள், பாலியல் வன்புணர்வு நிகழ்வுகளும் ஆங்காங்கே அரங்கேறுகின்றன. இதை தடுக்க முயலும் காவலாளிகள், உரிமையாளர்கள் கொல்லப்படுவதும் வாடிக்கையாகி வருகின்றன. ரயில் மற்றும் நகைக்கடை கொள்ளை சம்பவங்களையும், அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகளின் பாலியல் வன்புணர்வு சம்பவங்களையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தீர்வு என்ன?

இதுபோன்ற குற்றச் செயல்களில் வட இந்தியர்கள் செயல்பட்டாலும், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் இதைச் செய்வதில்லை என்பதுதான் பல நிறுவன உரிமையாளர்களின் கருத்தாக இருக்கிறது. மேலும், எதிர்பாராமல் தற்செயலாக உயிரிழக்கும் சம்பவங்களில்கூட வட இந்தியர்களின் உரிய பதிவுகள் இல்லாமல் காவல் துறையினர் சிரமப்படுவதும் கவனத்திற்குரியது. இதற்கு மெளலிவாக்கம் கட்டட விபத்து ஓர் உதாரணம். அந்த விபத்தில் இறந்தவர்களை அடையாளம் கண்டு சடலங்களை ஒப்படைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டுமானால், புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசுகளே அவர்களுடைய திறன்களை அறிந்து வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என்கின்றனர், தொழிலாளர் நலச் சங்கத்தினர்.

இதுகுறித்து அவர்கள், ”1979 ஜூன் மாதம் கொண்டுவரப்பட்ட இந்தியாவுக்குள் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கான வரன்முறை சட்டத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்து வரும் வெளி மாநிலத்தவர்களை ஒவ்வொரு மாநிலத்திலும் முறையாகப் பதிவு செய்து, வாரியங்களில் உறுப்பினராக இணைக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டால் வட மாநிலத்தவர் வருகை வரன்முறைக்குள் வந்துவிடும். தற்போது மாநிலங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

மத்திய, மாநில அரசுகளின் உதவி தேவை

ஆகவே தேசிய அளவிலான புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்க ஓர் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்த அமைப்பு மாநிலங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து வெளிமாநிலத் தொழிலாளர்களும் சுய பதிவு செய்ய தேசிய அளவில் இணையத்தில் வசதி ஏற்படுத்த வேண்டும். அனைவரும் பதிவு செய்ய சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதேநேரத்தில் புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசுகளே அவர்களுடைய திறன்களை கண்டறிந்து உரிய சம்பளத்துடன் கூடிய பணிகளை வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து அவர்களுக்கு உதவி செய்திட வேண்டும்” என்கின்றனர் தொழிலாளர் நலச் சங்கத்தினர்.

வெறுப்பு அரசியல் நிச்சயமாக தீர்வல்ல!

மேலே நாம் பார்த்த கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களின் உதாரணங்கள் நமக்கு உணர்த்துபவை வெறுப்பு பேச்சு அரசியல் என்பது ஒருபோதும் இது போன்ற இடம்பெயர் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வல்ல என்பதுதான். அத்தகைய வெறுப்பு பேச்சுக்குள் வன்முறைக்கு வழிவகுக்குமே அன்றி ஒரு போதும் தீர்வை நோக்கி இட்டுச் செல்லாது. வெறுப்பு அரசியலை முன் வைப்பவர்களை எவ்வளவு விரைவாக அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த முடியுமோ அவ்வளவ் விரைவில் வெளியேற்ற வேண்டும். அரசியலின் மைய சக்தியாக அவர்கள் வந்துவிட்டால் இதுபோன்ற சிக்கல்கள் புதிய பிரச்னையாக உருவெடுத்துவிடும். அதனால், எத்தகைய பிரச்னைக்கும் தீர்வு ஜனநாயக வழியில்தான் இருக்க வேண்டும். இதுவரையிலான வரலாறு அனைத்தும் நமக்கு அதனை போதித்து வந்துள்ளது. 

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com