இந்தியாவில் அதிகரிக்கும் கல்லீரல் நோய் மரணங்கள்.. அதிர்ச்சி தரும் காரணம்!
இந்தியாவில் கல்லீரல் நோய்களால் ஆண்டுக்கு 2,68,580 பேர் உயிரிழக்கின்றனர். உலகில் ஒவ்வொரு ஆண்டும் கல்லீரல் பிரச்சினைகளால் உயிரிழப்போரில் இந்தியாவின் பங்கு 18%க்கும் அதிகம்.
நம்மில் பலர் நினைப்பதுபோல் கல்லீரல் பிரச்சினைகள் மது அருந்தும் பழக்கத்தால் மட்டும் ஏற்படுவதில்லை. இந்தியாவில் கல்லீரல் நோய் உயிரிழப்புகளுக்கு மதுவுடன் தொடர்பற்ற கல்லீரல் கொழுப்பு நோய்களே காரணமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
தவறான உணவுமுறையே காரணம்..
பாரம்பரிய இந்திய உணவை விட்டுவிட்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த துரித உணவுகளை உட்கொள்வது கல்லீரலுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இந்த உணவுகள் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பாக சேமிக்கப்படுகின்றன.
பணிச்சூழல் உள்ளிட்ட காரணங்களுக்காக நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை உடலின் கொழுப்பை எரிக்கத் தடையாக உள்ளன. நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை வளர்சிதை மாற்ற செயல்பாடுகளை சீர்குலைத்து, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களை தூண்டுகிறது. நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு போன்ற பிரச்சினைகளை கவனிக்காமல் விடுவது, கல்லீரல் பாதிப்பை மேலும் விரைவுபடுத்துகின்றது.
உரிய மருத்துவ வழிகாட்டுதல் இன்றி மருந்துகள், சப்ளிமெண்ட்கள் எடுத்துக்கொள்வது கல்லீரல் பிரச்சினைகளை தீவிரப்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.