உறைந்த பனி ஏரிகள் குளிர்காலத்தில் உடைந்தது எப்படி?: வல்லுநர்கள் விளக்கம்
உறைந்திருக்கும் பனி ஏரிகள் கடும் குளிர்காலத்தில் உடைந்தது எப்படி. அதற்கு வல்லுநர்கள் கூறும் காரணங்கள் என்ன?
உத்தராகண்டில் தற்போது கடும் குளிர்காலம். பிப்ரவரி மாதம் என்பதால் வெப்பநிலை மைனசில் இருக்கும். ஆனாலும் பனி ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இது மிக மிக அரிய நிகழ்வு என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு அவர்கள் கூறும் ஒற்றைக்காரணம் புவி வெப்பமயமாதல். பொதுவாக குளிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என்றால் அதற்கு நிலச்சரிவு அல்லது பனிச்சரிவுதான் காரணமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக உறைந்திருக்கும் பனி ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக அண்டார்டிகா கண்டத்தில்தான் இதுபோன்ற பனி ஏரிகள் உடைப்பு நிகழும். ஆனால் இந்தியாவில் பனி ஏரியில் உடைப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இமயமலை பகுதியில் 8 ஆயிரம் பனி ஏரிகள் இருக்கின்றன. அவற்றில் 200 ஏரிகள் பெரும் விபத்து ஏற்படுத்தும் அபாயகரமான ஏரிகள் என்கின்றனர் விஞ்ஞானிகள். புவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் 10 சதவீதம் பனிப்பாறைகள் உருகியுள்ளன. உலகின் மற்ற பகுதிகளை விட இமயமலை பகுதியில் பனி ஏரிகள் உருகும் வேகம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் உத்தராகண்ட் பகுதியில் மேற்கொள்ளப்படும் நீர் மின் திட்டங்களும் வெள்ளம் ஏற்பட ஒரு காரணம் என்கிறார் நீரியல் நிபுணர் ஜனகராஜன்.
பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட ஒழுங்கற்ற வானிலை முறைகளும் இதுபோன்ற பேரிடருக்கு காரணம். இதற்கு முன்பு இமயமலையில் வெப்பநிலை அதிகபட்சம் மைனஸ் 6 டிகிரி என இருந்த நிலையில் தற்போது மைனஸ் 2 டிகிரியாக அதிகரித்துள்ளது.
புவி வெப்ப மயமாதலால் இதுபோன்ற வெள்ளங்கள் எதிர்காலத்தில் ஏற்பட்ட வாய்ப்பு இருக்கிறது என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இயற்கையை எந்த அளவுக்கு தொந்தரவு செய்கிறோமோ, அதன் எதிர்வினை அந்த அளவுக்கு வீரியமாக இருக்கிறது. மொத்தத்தில் பேரிடர் அனைத்துக்கும் மனித பிழையே காரணம் என்பதே சூற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து.