மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ! கட்சிகளின் வியூகம் என்ன?

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ! கட்சிகளின் வியூகம் என்ன?

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ! கட்சிகளின் வியூகம் என்ன?
Published on

பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீதான முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் நாளை கொண்டு வரப்படுகிறது.

ஆளும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் உதவியுடன் இத்தீர்மானத்தில் மோடி அரசு எளிதில் வெற்றிபெறும் என கூறப்படுகிறது. எனினும் இந்த தீர்மான நிகழ்வை தங்களுக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்ள ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மக்களவையில் தற்போதைய எம்பிக்கள் எண்ணிக்கை 534 ஆக உள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க 268 உறுப்பினர்கள் தேவை. இந்நிலையில் பாரதிய ஜனதாவிற்கு 273 உறுப்பினர்கள் உள்ளனர். 6 உறுப்பினர்களைக் கொண்ட லோக் ஜனசக்தி கட்சி, 2 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் மற்றும் 4 உறுப்பினர்களைக் கொண்ட அகாலி தளம் ஆகியவை மோடி அரசை ஆதரிக்கின்றன. 18 உறுப்பினர்களைக் கொண்ட சிவசேனா, மோடி அரசை ஆதரிக்காவிட்டாலும் எதிர்த்து வாக்களிக்காது என பாரதிய ஜனதா நம்புகிறது. 37 உறுப்பினர்களைக் கொண்ட அதிமுகவும் எதிர்க்காது என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 48 உறுப்பினர்கள் உள்ளனர். தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 உறுப்பினர்கள் இருக்கின்றனர். எதிர்க்கட்சி வரிசையில் உள்ள திரிணாமூல் காங்கிரசுக்கு 34 உறுப்பினர்களும், கம்யூனிஸ்டுகளுக்கு 11 உறுப்பினர்களும் உள்ளனர்.

சமாஜ்வாதிக்கு 7 உறுப்பினர்களும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர். 20 உறுப்பினர்களைக் கொண்ட பிஜூ ஜனதா தளம் மற்றும் 11 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகள் எதிர்க்கட்சிகளின் அணியில் சேருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால் வாக்கெடுப்பின்போது120 உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. இந்த நிகழ்வால் நரேந்திர மோடி அரசை கவிழ்க்க முடியாது என்றாலும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை பயன்படுத்தி அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அதேவேளையில், அரசின் சாதனைகளை பறைசாற்றும் வாய்ப்பாக தீர்மானத்தை பயன்படுத்திக்கொள்ள பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் நாளை அனல் பறக்கும் விவாதங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com