பிரதமர் மோடி நேற்று அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களின் விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். அதன்படி, சிறு, குறு தொழில் வரையறை மாற்றியமைக்கப்படுவதாகத் தெரிவித்தார். இந்த அறிவிப்பில், சிறுதொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை விரிவாக்க புதிய கடன் வசதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம் என்றும், முதல் ஓராண்டுக்குக் கடன் தவணை வசூலிக்கப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் குறுந்தொழில்களுக்கான முதலீட்டு வரம்பு ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர வாரக்கடன்களில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான திட்டங்கள் குறித்த கேள்விகள் பல உள்ளன. அத்துடன் அவர்களின் நிலை குறித்தும் முடிவு செய்யப்படவில்லை. அத்துடன் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்குத் தேவையான திட்டங்கள் எனவும் விவாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய பொருளாதார நிபுணர் பிரபு, “தற்போது ஆலைகள் இயங்க ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேறு இடத்திற்குச் செல்வது தேவையற்றது. அவர்கள் இங்கேயே இருந்தால் குடும்பத்திற்கு வருமானம் கிடைக்கும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இயல்பு நிலை திரும்பிய பின்னரே ஊருக்குச் செல்லலாம்.
ஏற்றுமதியை நாம் அதிகரித்தால் மட்டுமே முன்னேற்றம் அடைய முடியும். சீனா மீது பல்வேறு நாடுகளும் அவநம்பிக்கையில் இருக்கின்றன. இதனைப் பயன்படுத்தி நாம் ஏற்றுமதியை அதிகரித்து, போட்டித்திறனை உருவாக்க வேண்டும்” என்றார்.