’பேரடைஸ் பேப்பர்ஸ்’ ஊழல்: பட்டியலில் மத்திய அமைச்சர், அமிதாப் பச்சன் பெயர்கள்?

’பேரடைஸ் பேப்பர்ஸ்’ ஊழல்: பட்டியலில் மத்திய அமைச்சர், அமிதாப் பச்சன் பெயர்கள்?
’பேரடைஸ் பேப்பர்ஸ்’ ஊழல்: பட்டியலில் மத்திய அமைச்சர், அமிதாப் பச்சன் பெயர்கள்?

வரி ஏய்ப்பு செய்ய வெளிநாடுகளில் முதலீடு செய்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களில், மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பேரடைஸ் பேப்பர்ஸ் ஆவணத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அரசுக்கு வரியைச் செலுத்தாமல் தவிர்க்கும் பொருட்டு வெளிநாடுகளுக்குப் பணத்தை மாற்ற உதவும் இரணடு சர்வதேச நிறுவனங்கள் தான் பெர்முடாவை சேர்ந்த ஆப்பிள்பை மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த ஏசியாடிக் டிரஸ்ட். இந்த நிறுவனங்களிலிருந்து கசிந்த சுமார் 13.4 மில்லியன் ஆவணங்களை ஜெர்மனியைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று வாங்கியது. இந்த ஆவணங்கள் தான் பேரடைஸ் பேப்பர்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பேரடைஸ் பேப்பர்ஸ் ஆவணத்தில் வர்த்தக ரகசியங்களை அதிகமாக காக்கும் 19 நாடுகளில் நடைபெற்ற நிதி பரிவர்த்தனைகள் குறித்து அதிக தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அரசுக்கு வரி செலுத்தாமல் தவிர்ப்பதற்காக பெர்முடா, பிரிட்டீஷ் விரிஜின் தீவுகள், கேமென் தீவுகள், ஐஸ் ஆப் மான், மொரிஷியஸ், செஷல்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பணத்தை மாற்றிக்கொள்ளும் வசதியை செய்து தரும் நிறுவனம்தான் ஆப்பிள்பை. வெளிநாட்டில் ஒரு போலி நிறுவனத்தை உருவாக்கி அந்த நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் வாங்கப்படும். பின்னர் பங்குகளை விற்பதற்கான வரியை தவிர்க்கும் பொருட்டு, வெளிநாட்டில் இயங்கி வரும் போலி நிறுவனத்திடம் விற்கப்படும். இவ்வாறு செய்வதால் போலி நிறுவனத்தின் வசம் உள்ள பங்குகள் எந்தவித வரியும் இன்றி கைமாறும்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய ஆய்வில் பல்வேறு இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்த தகவல்களும் பேரடைஸ் பேப்பர்ஸ் ஆவணத்தில் இடம்பெற்றிருப்பது தெரியவந்திருக்கிறது. இந்தியாவில் வரி செலுத்துவதைத் தவிர்க்க பல்வேறு வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது குறித்த தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சன் டிவி- ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. எனினும் முறைகேடுகள் நடந்ததற்கான எந்த நேரடி ஆதாரமும் இந்த ஆவணங்களில் இருப்பதாக இதுவரை தெரியவில்லை.

அரசுக்கு வரியைச் செலுத்தாமல் தவிர்க்கும் பொருட்டு வெளிநாடுகளுக்குப் பணத்தை மாற்ற உதவும் இரண்டு சர்வதேச நிறுவனங்களில் இருந்து கசிந்த விவரங்களில் 714 இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்திருக்கிறது. இந்த பட்டியலில் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர கிஷோர் சின்ஹா, பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் பெயர்களும் இடம்பெற்றிருப்பதாகத் கூறப்படுகிறது.

இந்நிலையில் பேரடைஸ் பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பாக வருமானவரித்துறை தலைவர் தலைமையில் அரசு விசாரணை செய்யும் என்று இந்திய நிதி அமைச்சகம்  தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com