குழந்தைகளுக்குக் குறி.. 60 ஆண்டுகளுக்குப் பிறகு அதிர்ச்சி சம்பவம்.. பாதிப்புகள் என்ன?
குழந்தைகளை மட்டும் தாக்கும் ஒரு வைரஸானது, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவில் தலைதூக்கியிருப்பதால் பெற்றோர்களும் பொதுமக்களும் அச்சம் கொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் அவ்வப்போது ஏதாவது ஒரு வைரஸ் மக்களைத் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஒரு வைரஸ், மீண்டும் தலைதூக்கியுள்ளது. சண்டிபுரா (Chandipura Virus - CHPV)என அறியப்படும் இந்த வைரஸால், குஜராத்தில் மட்டும் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், சண்டிபுரா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட 184 பேரில், மேலும் 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குஜராத் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு, இந்தியாவில் 2024-ஆம் ஆண்டு இந்த வைரஸால் 64 உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. இந்த வைரஸ் பொதுவாக குழந்தைகளை, குறிப்பாக 15 வயதுக்குட்பட்டவர்களைப் பாதிக்கிறது. இதனால், அவர்களே அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.
‘இந்த வைரஸை அதிக நோயுண்டாக்கும் வைரஸ்’ எனத் தெரிவித்துள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம், ‘இது முதன்மையாகக் குழந்தைகளில் கடுமையான மூளை அழற்சி நோய்க்குறியை ஏற்படுத்துகிறது என்றும், இதன் பதிவான இறப்பு விகிதம் 55-77% வரை உள்ளது’ என்றும் அது குறிப்பிட்டுள்ளது. அதேபோல், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையமானது, (NCDC) “இந்த நோய் வேகமாகப் பரவக்கூடும் என்றும், கடுமையான பாதிப்புகள் உள்ளவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 48 முதல் 72 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்படக்கூடும்’ என்றும் தெரிவித்துள்ளது.
ராப்டோவிரிடே (Rhabdoviridae) வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸ், 1965-ஆம் ஆண்டு மனித மூளை அழற்சி நோய்க்கான ஒரு காரணமாக அடையாளம் காணப்பட்டபோது, ஐ.சி.எம்.ஆர் இதன் கண்டுபிடிப்பைப் பதிவு செய்தது. அந்த ஆண்டு, மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் உள்ள சண்டிபுரா கிராமத்தில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய பெயர் சூட்டப்பட்டது. அதன் பிறகு, இந்தியாவில், குறிப்பாக மேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் இதன் தாக்கம் ஏற்பட்டது. இந்த வைரஸ், மனிதரிடமிருந்து மனிதருக்கு நேரடியாகப் பரவுவதில்லை. பாதிக்கப்பட்ட மணல் ஈக்கள் (Sandflies) மற்றும் கொசுக்கள் கடிப்பதன் மூலமே மனித உடலுக்குள் பரவுகிறது.
அதாவது, இது முக்கியமாக நோய்த்தொற்றுள்ள, இரத்தம் குடிக்கும் பூச்சிகள் மூலம் பரவுகிறது. குறிப்பாகப் பருவமழைக் காலத்தில், இந்தப் பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்குச் சாதகமான சூழல் நிலவுவதால், சண்டிபுரா வைரஸ் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வைரஸ் உடலுக்குள் சென்றவுடன், காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட சாதாரணமான அறிகுறிகள் தோன்றும். ஆனால், சில நோயாளிகளிடம் இது வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட்டு மூளையை விரைவாகத் தாக்கக்கூடும் தன்மை கொண்டது. காய்ச்சல் தொடங்கிய 24 முதல் 48 மணி நேரத்திற்குள் இது நரம்பு மண்டலத்தைச் செயலிழக்கச் செய்து, வலிப்பு மற்றும் கோமா நிலைக்குக் கொண்டு சென்றுவிடும் அளவிற்கு அதிதீவிரமானது. இந்த வைரஸுக்கு எனத் தனியாகத் தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட மருந்தோ இல்லை என்பதால், ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தெரிந்தவுடனேயே தீவிர மருத்துவச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுத் தரப்படும் ஆதரவுச் சிகிச்சைகளே முதன்மையானவையாக உள்ளது.

