மகாராஷ்டிரா தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் பலி - நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா மாவட்ட பொதுமருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு குறை பிரசவம் மற்றும் ஏதேனும் குறைபாடுடன் பிறக்ககூடிய குழந்தைகளுக்கு என்று தனி பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பச்சிளம் குழந்தைகள் பிரிவில் இன்று அதிகாலை 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. அதில், 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.
ஏழு குழந்தைகளை மீட்கப்பட்டனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தில் இறந்தவரின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் வழங்கப்படும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா , “என் வேதனையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. குழந்தைகளை இழந்துவாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்ட மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். குழந்தைகளை இழந்துவாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “பண்டாரா தீ விபத்து இதயத்தை நொறுக்குகிறது. நாம் விலைமதிப்பற்ற இளம் உயிர்களை இழந்துவிட்டோம். குழந்தைகளை இழந்துவாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் மிக விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மருத்துவமனை நிர்வாகத்தின் கவனக்குறைவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் மருத்துவமனை முறையாக செயல்படாததால்தான் தங்கள் குழந்தையை இழந்துள்ளதாகவும் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.