8 வழிச்சாலை பலன்கள் என்ன ? : நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த மத்திய அரசு
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்து விவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
எட்டு வழிச்சாலை திட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து நிலம் முறையாக கையகப்படுத்தவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து, மத்திய நெடுஞ்சாலை துறை சார்பில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எட்டு வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள், பலன்கள், மக்களின் கருத்துக்கள் ஆகியவை அடங்கிய அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது.
அப்போது, தங்களையும் ஒரு தரப்பினராக சேர்த்து தங்களுடைய கருத்துக்களை கேட்க வேண்டும் என விவசாய அமைப்புகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் மனுதாரர்களாக இருந்தவர்கள், இந்த வழக்கில் எதிர்மனுதாரரார்களாக சேர்த்துவிட்டதாக தெரிவித்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், புதிதாக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களுக்கு, மத்திய அரசு பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.