2025-26 மத்திய பட்ஜெட் | கவனம் பெறவிருக்கும் திட்டங்கள் என்னென்ன?
மத்திய அரசின் கொள்கைகள் ஆதரவாக இருந்தால் இந்தியாவின் வளர்ச்சி உறுதியாகும்!
எதிர்வரும் மத்திய பட்ஜெட்டில் சாதகமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் இந்தியாவின் வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7 சதவிகிதத்தை எட்ட வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி விகிதம் 6.3 சதவிகிதமாக குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் கொள்கைகள் ஆதரவாக இருந்தால் உறுதியான வளர்ச்சி தெரியும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு, வருவாய் செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் வருமான வரிக்கொள்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டின் அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய பட்ஜெட்: கவனம்பெறும் திட்டங்கள்
வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் விதமாக மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பான கீழ்வரும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் மற்றும் 2ஆம் தர நகரங்களில் வீடுகளுக்கு தேவை அதிகரித்துள்ள நிலையில், மத்திய பட்ஜெட்டில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் பிரதமரின் ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கிராமப்புற சாலைகள் இணைப்பில் கவனம் செலுத்தும் திட்டமான பிரதமரின் கிராம சதக் யோஜனா திட்டத்திற்கு எதிர்வரும் பட்ஜெட்டில் குறிப்பிடதக்க தொகை ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கிராமங்களில் வளர்ச்சியை அதிகரிக்க இத்திட்டத்திற்கான செலவினங்களை 10 சதவிகிதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குறைந்தபட்ச ஆதரவு வருவாய் வழங்கும் கிசான் சம்மான் நிதி திட்டத்தில் விவசாயிகளுக்கு கூடுதலாக நிதியை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
நாட்டின் முதுகெலும்பாக திகழும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் இத்துறைக்கு கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.