வின்டேஜ் வாகனங்களைப் பதிவுசெய்ய புதிய விதிமுறைகள் என்னென்ன?

வின்டேஜ் வாகனங்களைப் பதிவுசெய்ய புதிய விதிமுறைகள் என்னென்ன?
வின்டேஜ் வாகனங்களைப் பதிவுசெய்ய புதிய விதிமுறைகள் என்னென்ன?

பழங்கால வின்டேஜ் வாகனங்கள் தொடர்பான மத்திய மோட்டார் வாகன விதிகளில் 1989, திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக, பொது மக்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறுவதற்கான அறிவிப்பை, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு மூலம், பழங்கால - வின்டேஜ் வாகனங்களின் பதிவை முறைப்படுத்த சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பாரம்பரியமிக்க பழைய வாகனங்களின் பதிவை முறைப்படுத்த, தற்போது எந்த விதிமுறையும் இல்லை. அதனால், மோட்டார் வாகன சட்டத்தில், வின்டேஜ் வாகனங்களைப் பதிவு செய்வதற்கான துணை விதிகள் 81, ஏ,பி,சி,டி,இ,எப்,ஜி என துணை விதிகளாக சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளன. 

இந்த வரைவு விதிகள்படி, வின்டேஜ் வாகனங்கள் என்றால் பதிவு செய்து 50 ஆண்டுகளுக்கு மேலானவையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் உடல் பகுதியிலும், இன்ஜினிலும் கணிசமான மாற்றம் இருக்க கூடாது.

புதிய நடைமுறைகள் என்னென்ன? 

வின்டேஜ் வாகனங்களின் பதிவுக்கான விண்ணப்பங்களை பரிவாகன் (PARIVAHAN) இணைய தளத்திலேயே மேற்கொள்ளவேண்டும்.

* அனைத்து மாநில பதிவு ஆணையங்களும், பழங்கால வாகனங்கள் பதிவுக்கு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்.

* பழங்கால வாகனங்கள் பிரிவின் கீழ் பதிவு செய்வதற்கு, வாகனம் தகுதியானதா என்பதை ஆய்வு செய்ய மாநிலங்கள் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

* அனுமதி வழங்கப்பட்டால், 10 இலக்கத்தில் ஆங்கில எழுத்துக்கள் மற்றும்  எண்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ‘‘XX VA YY **’’ என்ற முறையில் எண்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் XX என்பது மாநில குறியீட்டையும், VA என்பது பழங்கால வாகனத்தையும், YY என்பது இரண்டு எழுத்து தொடரையும், மீதமுள்ள 4 இலக்கங்கள் 0001 முதல் 9999 வரை இடம் பெறும்.

* புதிய பதிவுக் கட்டணம் ரூ.20,000. அதைத் தொடர்ந்த மறுபதிவு கட்டணம் ரூ.5,000.

* பழங்கால வாகன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டால், அந்த வாகனங்களின் மறு விற்பனை அதே சட்ட விதிகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும்.

* வாகன கண்காட்சி, எரிபொருள் நிரப்புவதற்கு மற்றும் பராமரிப்பு பணிக்காக மட்டும் பழங்கால வாகனங்களை ரோட்டில் பயன்படுத்த வேண்டும்.

இதன் நோக்கம், இந்தியாவில் பழங்கால வாகனங்களைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவது ஆகும்.

இந்த வரைவு விதிகள் குறித்த ஆட்சேபணைகள், ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் மோட்டார் வாகன சட்ட இயக்குனருக்கு director-morth@gov.in என்ற இ-மெயில் முகவரியில் இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் அனுப்பலாம் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வாகன உரிமையாளர்களின் நியமனதாரர்கள் பதிவுக்கு...

இதேபோல், வாகன உரிமையாளர்கள் தங்களின் நியனமதாரர்களைப் பதிவு செய்வதற்கான வரைவு விதிகள் குறித்தும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் பொது மக்களிடம் கருத்து கேட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தேசித்துள்ளது. இதற்கான வரைவு விதிகள் தயார் செய்யப்பட்டு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

வாகனங்களின் உரிமையாளர்கள், தங்களின் சட்டப்படியான வாரிசை, நியமனதாரராக வாகனப் பதிவு புத்தகத்தில் (ஆர்.சி) பதிவு செய்யும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளது. இதற்கான வரைவு விதிகள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளது. 

வாகனத்தின் உரிமையாளர் இறக்க நேர்ந்தால், அந்த வாகனத்தை  நியமனதாரின் பெயரில்  பதிவு செய்வதற்கும், மாற்றம் செய்வதற்கும் இந்த வசதி சேர்க்கப்படவுள்ளது. வாகன உரிமையாளர் இறந்தால், அவரது இறப்பு சான்றிதழை, வாகன  பதிவுத்துறை  இணையளத்தில் நியமனதாரர் பதிவேற்றம் செய்து தனது பெயருக்கு மாற்றிக் கொள்ளலாம்.

இந்த வரைவு விதிகள் குறித்த ஆட்சேபணைகள், ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை, இந்த அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள்,  மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் மோட்டார் வாகன சட்ட இயக்குனருக்கு director-morth@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், Ministry of Road Transport and Highways, Transport Bhawan, Parliament Street, New Delhi-110 001  என்ற முகவரியிலும் அனுப்பலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com