குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி புறக்கணிப்பு.. பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி.. விளக்கம் கேட்டு நோட்டீஸ்!
மேற்கு வங்கத்தில் நடைபெறும் 9வது சர்வதேச சந்தாலி மாநாட்டின் இடம் மாற்றப்பட்டதும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்ட நிகழ்வில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பிற அமைச்சர்கள் பங்கேற்றுக் கொள்ளாததும் அதற்கு பிரதமர் மோடியும், குடியரசுத் தலைவரும் கண்டனம் தெரிவித்ததும் வார்த்தைப் போராக மாறியுள்ளது.
2026ஆம் ஆண்டு 9ஆவது சர்வதேச சந்தால் மாநாடு மார்ச் 7, 2026 அன்று மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்றது. பழங்குடி ஒற்றுமை, கலாசார பாரம்பரியம் மற்றும் சமூகப் பொருளாதார அதிகாரமளிப்பில் கவனம் செலுத்துவதற்காக சர்வதேச சந்தால் கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.
மாநாடு இடமாற்றம் குறித்து குடியரசுத் தலைவர் அதிருப்தி
இதில் உரையாற்றிய திரெளபதி முர்மு, தன்னை வரவேற்க முதல்வரோ அல்லது மாநில அமைச்சர்களோ வராதது குறித்தும் அதிருப்தி தெரிவித்தார். இதுகுறித்து அவர், “மாநாடு வெகுதொலைவில் நடைபெற்றதால் இங்குள்ள மக்கள் அதை அடைய முடியாமல் போனது மிகவும் வருத்தமாக உள்ளது. இடத்தை மாற்றியதற்கான காரணங்கள் ஏற்புடையவை அல்ல. ஒருவேளை யாரும் கலந்துகொள்ள முடியாது என்பதால் தாம் வெறுமனே திரும்பிச் சென்றுவிடலாம் என்று அரசு நிர்வாகம் நினைத்திருக்கலாம். பொதுவாக, குடியரசுத் தலைவர் வரும்போது, முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் உடனிருப்பார்கள். ஆனால், முதலமைச்சர் வரவில்லை. நானும் வங்காளத்தின் மகள்தான். எனக்கு வங்காளத்திற்குச் செல்ல அனுமதி இல்லை. மம்தா என் தங்கையைப் போன்றவர். ஒருவேளை, அவர் என்மீது கோபமாக இருக்கலாம், அதனால்தான் இந்த நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது. ஆனால் பரவாயில்லை” என வருத்தம் தெரிவித்தார்.
சர்வதேச சந்தால் மாநாடு ஆரம்பத்தில் பிதான் நகரில் நடைபெறவிருந்தது. ஆனால், பின்னர் நெரிசல் காரணமாக பாக்டோக்ரா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கோஷய்பூரில் உள்ள ஒரு சிறிய இடத்திற்கு மாற்றப்பட்டதாக மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி கண்டனம்; மம்தா பதிலடி!
இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடி கண்டித்துள்ளார். அவர் தனது சமூகவலைத் தளப் பக்கத்தில், ”மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் அரசு உண்மையிலேயே அனைத்து வரம்புகளையும் தாண்டிவிட்டது. இது வெட்கக்கேடானது மற்றும் பழங்குடி சமூகங்களின் அதிகாரமளிப்பில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கவலையடைந்தனர். குடியரசுத் தலைவருக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு மேற்கு வங்க நிர்வாகமே பொறுப்பு” எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, “பாஜக மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. அவர்கள் மேற்கு வங்கத்தை அவதூறு செய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் வருடத்திற்கு ஒரு முறை வந்தால் நான் உங்களை வரவேற்க முடியும். ஆனால், நீங்கள் தேர்தல்களின்போது வந்தால், நான் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் மும்முரமாக இருப்பதால் உங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாது” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.
இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர்
திரெளபதி முர்மு பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமீறல் சர்ச்சை நிகழ்ந்ததைத் தொடர்ந்து, மாலை 5 மணிக்குள் விரிவான விளக்கம் அளிக்க மாநில தலைமைச் செயலாளர்
நந்தினி சக்கரவர்த்திக்கு மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

