சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்

சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்

முகமது நபி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு எதிராக மேற்கு வங்க காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

ஞானவாபி மசூதியில் அகழாய்வு செய்யும் விவகாரம் தொடர்பாக ஒரு இந்தி தொலைக்காட்சியில் கடந்த மே மாத இறுதியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, முகமது நபி குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளை கூறினார். இது, நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சை கண்டித்து பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. ஒருகட்டத்தில், குவைத், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது. இதன் தொடர்ச்சியாக, நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து பாஜக இடைநீக்கம் செய்தது.

இதனிடையே, நுபுர் சர்மா மீது நாட்டின் பல மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. இதில் மேற்கு வங்கத்தில் நார்கெல்டங்கா காவல் நிலையத்திலும், ஆம்ஹெர்ஸ்ட் காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கடந்த மாதம் வெவ்வேறு தேதிகளில் நுபுர் சர்மாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, நுபுர் சர்மாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை மேற்கு வங்க காவல்துறை இன்று பிறப்பித்துள்ளது. ஒரு நபருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டால், அவர் வெளிநாடுகளுக்கு செல்வது தடுத்து நிறுத்தப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com