சட்டவிரோத சுங்கச்சாவடிகளை மூட உத்தரவு.. தொடர்ந்து அதிரடி காட்டும் பாஜக புதிய அரசு!
மேற்கு வங்கத்தில் புதிதாக பதவியேற்ற பாஜக அரசு, மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் சட்டவிரோத சுங்கச்சாவடிகள் மற்றும் அங்கீகரிக்கப்படாத நுழைவாயில்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட்டு, முதன்முறையாக பாஜக அரசு அமைத்துள்ளது. அக்கட்சியின் முதல்வராக பதவியேற்ற நிலையில் சுவேந்து அதிகாரி, தொடக்கம் முதலே அதிரடி காட்டி வருகிறார். அந்த வகையில், தன்னுடைய முதல் அமைச்சரவைக் கூட்டத்தின்போதே, இந்தியா - வங்கதேசம் எல்லையில் வேலி அமைப்பது தொடர்பாக ஆலோசித்தார். தொடர்ந்து அதற்கான செயல்முறைக்கும் உத்தரவிட்டார். இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவரும் அனைத்து சுங்கச்சாவடிகள் மற்றும் தடுப்பு வாயில்களையும் உடனடியாக மூட மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தலைமைச் செயலர் மனோஜ் அகர்வால் வெளியிட்டுள்ளார்.
அரசு வெளியிட்டுள்ள இந்த அதிரடி உத்தரவில் மேற்கு வங்க அரசின் உரிய அனுமதி பெறாமல்,வாகனப் போக்குவரத்தை மறித்து செயல்படும் அனைத்து சுங்கச்சாவடிகள் மற்றும் தடுப்பு கட்டமைப்புகள் உடனடியாக மூடப்படவேண்டும். அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சட்டவிரோத சுங்கச்சாவடிகளைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அவை அமைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்படாத இடங்களில்கட்டணம், வரி அல்லது இதர வசூலில் ஈடுபடுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சுங்கச்சாவடிகளின் பட்டியல், அவற்றை நிர்வகிக்கும் அதிகாரம் மற்றும் டெண்டர் காலம் ஆகியவற்றை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதமான வசூல் மையங்களின் முழுமையான பட்டியலைத் தயார்செய்து, வரும் மே 15, 2026 அன்று மதியம்12 மணிக்குள் துணைச் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதில் ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டால் அதற்குரிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமைச் செயலாளர் மனோஜ் அகர்வால் எச்சரித்துள்ளார். பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கவும்,சட்டவிரோத பண வசூலைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புதிய பாஜக அரசில் மனோஜ் அகர்வால் உயர் அதிகாரியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றியதால், அவரது நியமனம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

