எறும்புத்திண்ணியை குறிவைத்து நடக்கும் கடத்தல் வியாபாரம்: 5 பேர் கைது
சர்வதேச கள்ளச்சந்தையில் விற்பதற்காக எறும்புத்திண்ணியை கடத்திய 5 பேரை மேற்கு வங்க வனத்துறையினர் கைது செய்தனர்.
சர்வதேச கள்ளச்சந்தையில் கடத்தி விற்பக்கப்படும் உயிரினங்களாக ஆமைகள், கடல் அட்டைகள் ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி யானைகளின் தந்தங்கள், புலித்தோள், காண்டாமிருகங்களின் கொம்புகள் ஆகியவை சந்தைகளில் கடத்தி விற்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் விட அதிக அளவில் நல்ல விலைக்கு விற்கப்படும் உயிரினமாக தற்போது இருப்பது ‘எறும்புத்திண்ணிகள்’ தான். இவற்றில் பங்கோலின் அல்லது மம்மல் எனப்படும் பாலூட்டி இன ‘எறும்புத்திண்ணிகள்’ அதிக அளவில் கடத்தப்படும் ஒரு உயிரினமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் எறும்புத்திண்ணிகள் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் வடக்கு வங்காளத்தில் சிலர் ‘எறும்புத்திண்ணி’ ஒன்றை பிடித்து கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர், பெலகோபா என்ற வனப்பகுதியில் ‘எறும்புத்திண்ணி’யுடன் தப்பிக்க முயன்ற 5 பேரை பிடித்தனர்.
அவர்களிடம் இருந்து பங்கோலின் இன ‘எறும்புத்திண்ணி’ ஒன்று மீட்கப்பட்டது. அவர்கள் அதை கலிஜ்ஹோரா வனப்பகுதியில் பிடித்துள்ளனர். அத்துடன் சிக்கிமில் இருந்து பூடானிற்கு கடத்தவும் திட்டமிட்டிருந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யானைகளின் தந்தங்கள் போல, எறும்புத்திண்ணிகளின் செதில்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றனர்.