நந்திகிராமில் 144 தடை உத்தரவு: மேற்கு வங்க 2-ம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்!

நந்திகிராமில் 144 தடை உத்தரவு: மேற்கு வங்க 2-ம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்!
நந்திகிராமில் 144 தடை உத்தரவு: மேற்கு வங்க 2-ம் கட்ட தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்!

முக்கியத்துவம் வாய்ந்த நந்திகிராம் தொகுதியில் வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக மேற்கு வங்கத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் ஏற்கெனவே 27-ஆம் தேதி நடந்து முடிந்துவிட்ட நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை (ஏப்.1) நடைபெறுகின்றது.

30 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறக் கூடிய நிலையில், இதில் முக்கியமானதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி களம் காணும் நந்திகிராம் தொகுதி அதிக கவனம் ஈர்த்துள்ளது.

ஏற்கெனவே நடந்து முடிந்த முதற்கட்ட வாக்குப் பதிவின்போது குண்டுவெடிப்பு, வாக்குச்சாவடி மையங்கள் கைப்பற்றுதல் உள்ளிட்ட பல வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தி இருக்கிறது இந்திய தலைமை தேர்தல் ஆணையம்.

சுமார் 10,620 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், மொத்தம் 75,95,000 வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றவுள்ளனர்.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதி அதிக கவனம் பெற்றுள்ள தொகுதி என்பதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு என்பது போடப்பட்டிருக்கிறது. அந்த தொகுதி முழுவதும் 144 தடை உத்தரவை ஏப்ரல் 2ஆம் தேதி வரை அமல்படுத்தி உள்ள மாவட்ட ஆட்சியர் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 200 மீட்டர் வரை நபர்கள் கூடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் பணிகளில் ஈடுபடும் தேர்தல் அதிகாரிகள் காவல்துறையினர் உள்ளிட்டோர் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து 100 மீட்டருக்குள் அலைபேசி வயர்லெஸ் தொலைதொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட எதையும் கட்டாயம் எடுத்து வரக்கூடாது என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நந்திகிராம் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முக்கிய தலைவரான சுமந்து அதிகாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி தலைவர் ஆன மீனாட்சி முகர்ஜி ஆகியோர் களத்தில் நிற்கின்றனர்.

முன்னதாக நந்திகிராம் தொகுதிக்குள் பாரதிய ஜனதா கட்சி அடியாட்களை இறக்கி உள்ளது என்றும், சுமூகமாக தேர்தல் நடைபெறுவதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் நிச்சயம் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றும் குற்றம்சாட்டிய முதல்வர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொண்டிருந்தார். இதனை அடுத்து பாதுகாப்பு என்பது பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு மட்டும் சுமார் 800 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நந்திகிராமை தவிர்த்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அசோக் டின்டா போட்டியிடும் மயோனா தொகுதி, பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் கோஷம் தொகுதி ஆகியவையும் முக்கியப் பகுதிகள் என்பதால் அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நடைபெற உள்ள 30 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சமபலத்துடன் மோதுகிறது. அதேநேரத்தில் கூட்டணி அமைத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி 7 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களிலும், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், முப்பதுக்கும் அதிகமான சுயேட்சைகளும் களத்தில் நிற்கின்றனர்.

வியாழக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை ஆறு மணி வரை நடைபெற உள்ளது.

- நிரஞ்சன் குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com