மேற்கு வங்கம்: ரீல்ஸ் எடுக்க குழந்தையை விற்று ஐபோன் வாங்கிய தம்பதி! அதிர்ச்சிப் பின்னணி!

ஐபோன் வாங்கி வீடியோக்கள் எடுப்பதற்காகப் பெற்ற குழந்தையையே தம்பதியினர் விற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐபோன்
ஐபோன்கோப்புப் படம்

மேற்கு வங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்தேவ். இவருடைய மனைவி, சதி. இவர்களுக்கு 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் 7 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர்கள் செல்போன் மூலம் வீடியோக்களைப் பதிவுசெய்து சமூக வலைத்தளத்தில் வெளியிடக்கூடியவர்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்காக விலை உயர்ந்த வகையிலான ஐபோனை வாங்க அவர்கள் நினைத்துள்ளனர். ஆனால், அதை வாங்குவதற்கான பணம் இல்லை. இதற்காக தன்னுடைய ஆண் குழந்தையை விற்றுள்ளனர். அந்தப் பணத்தின் மூலம் ஐபோனை வாங்கியுள்ளனர்.

இதற்கிடையே, அவர்கள் வீட்டில் அந்தக் குழந்தையைக் காணாது அக்கம்பக்கதினர் விசாரித்து உள்ளனர். அதற்கு பெற்றோர் இருவரும், “குழந்தை உறவினர் வீட்டில் உள்ளது” எனக் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் சொன்ன பதிலில் அக்கம்பக்கத்தினர் திருப்தி அடையவில்லை. குழந்தையை வேறு ஏதாவது செய்திருக்கலாம் எனச் சந்தேகமடைந்த அவர்கள், உள்ளூர் கவுன்சிலர் தாரக் குஹாவுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அவர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது குழந்தையின் தாய், குழந்தையை விற்றுக்கொண்டதை ஒப்புக்கொண்டார். ”குழந்தையை விற்ற பணத்தில் ஐபோன் வாங்கியதுடன், வீடியோ காட்சிகள் எடுப்பதற்காகவும் செலவுகள் செய்தோம்” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து குழந்தையை விற்றவரின் விவரங்களும் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரிடமிருந்து குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, குழந்தையின் தாய் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். போலீஸ் தரப்பில் “இச்சம்பவத்துக்கு இடையே, அந்த ஆண் குழந்தையை விற்றபிறகு, 7 வயது மகளையும் விற்பதற்கு கடந்த 22ஆம் தேதி முயற்சி செய்துள்ளார் தந்தை ஜெய்தேவ். தற்போது நல்வாய்ப்பாக அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அம்முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மேலும் தம்பதியினர் இருவரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். முக்கியமாக, மது வாங்குவதற்காகத்தான் குழந்தையை விற்றுள்ளனர். போதைப் பழக்கத்தால் இருவரும் அண்டை வீட்டாருடன் கூட அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டுள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.

arrested
arrestedpt desk

மேலும் போலீசார், “தம்பதியினர் குழந்தையை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து மேற்குவங்கம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். அந்தப் பணத்தில் ஐபோனை வாங்கியதுடன், வீடியோக்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இந்த வழக்கில் குழந்தை கடத்தல் மோசடி ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com