மேற்கு வங்க நிலக்கரி ஊழல்: சிபிஐ விசாரணை வளையத்தில் மம்தாவின் உறவினர்... நடப்பது என்ன?

மேற்கு வங்க நிலக்கரி ஊழல்: சிபிஐ விசாரணை வளையத்தில் மம்தாவின் உறவினர்... நடப்பது என்ன?
மேற்கு வங்க நிலக்கரி ஊழல்: சிபிஐ விசாரணை வளையத்தில் மம்தாவின் உறவினர்... நடப்பது என்ன?

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சம்பந்தப்பட்டுள்ள சாரதா சிட்ஃபண்ட் ஊழல், நிலக்கரி ஊழல் வழக்குகளை சி.பி.ஐ அதிகாரிகள் துரிதமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். நிலக்கரி கடத்தல் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வினய் மிஸ்ரா, மம்தா பானர்ஜியின் மருமகனான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ஆகியோர் சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ளனர். அபிஷேக் பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி ஆவார்.

மேற்கு வங்க அரசியலை பொறுத்தமட்டில் மம்தா பானர்ஜியின் நிழலாகவும், திரிணாமுல் காங்கிரஸில் செல்வாக்கு வாய்ந்த நபராகவும் கருதப்படுபவர் அபிஷேக் பானர்ஜி. இவரை காரணம் காட்டியே மம்தா பானர்ஜி வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்ற நிலையில், இன்று அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா நருலா பானர்ஜியிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்கிறது. அபிஷேக்கின் உறவினர் மேனகா கம்பீரிடமும் சிபிஐ நேற்று விசாரணை மேற்கொண்டது கவனிக்கத்தக்கது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மம்தா பானர்ஜியின் குடும்பத்தின் மிக நெருங்கிய உறுப்பினர் மற்றும் திரிணாமுல் கட்சியின் வாரிசாக அறியப்படும் அபிஷேக் குடும்பத்தை சிபிஐ வளைத்திருப்பது மேற்கு வங்க அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படி சிக்கலை ஏற்படுத்திய அந்த நிலக்கரி ஊழல் என்ன? ருஜிரா பானர்ஜி எவ்வாறு அதில் தொடர்பாகியுள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம்.

மேற்கு வங்க `நிலக்கரி ஊழல்' விவகாரம்:

சிபிஐ தற்போது விசாரித்து வரும் மேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கில், `அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் உதவியுடன் சட்டவிரோத சுரங்க தோண்டுதல் மற்றும் தோண்டப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள் நிலக்கரியை மேற்கு வங்க எல்லைகள் வழியாக உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு கடத்திச் சென்றுள்ளனர்' என்பதே குற்றச்சாட்டு.

சமீபத்திய வாரங்களில், மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில், குறிப்பாக புருலியா, மேற்கு பர்த்வான் மற்றும் கொல்கத்தாவில் சிபிஐ இந்த வழக்கு தொடர்பாக ரெய்டு நடத்தியது. இந்த சோதனை, உள்ளூர் கடத்தல்காரர்கள் எப்படி பெரிய அளவிலான நெட்வொர்க்கை தொடர்புகொண்டார்கள் என்பதை அறிவதற்காக நிலக்கரி வழக்கில் தொடர்புடைய உள்ளூர் கடத்தல்காரர்களை தேடி நடத்தப்பட்டது.

இந்த வழக்கு சம்பந்தமாக, லாலா என்று பிரபலமாக அழைக்கப்படும் அனுப் மஜி மற்றும் அவரது உதவியாளர் ஜாய்தேப் மொண்டோல் ஆகியோருக்கு எதிராக சிபிஐ 2020 நவம்பரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தது, அவர்கள் இருவரும் இந்த பல கோடி நிலக்கரி ஊழலின் ராஜாக்கள் என்று சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது.

இந்த லாலா மற்றும் மொண்டால் ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட் லிமிடெட் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பொறுப்பாளர்களின் உதவியுடன் நிலக்கரி பெருமளவில் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரூ.20,000 கோடி மதிப்புள்ள இந்த சட்டவிரோத நிலக்கரி திருட்டில் ஈடுபட்டதாக இருவரையும் சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகம் (இடி) 2020 நவம்பரில் விசாரித்தன.

விசாரணையில், ``நிலக்கரி திருட்டை தடையின்றி செய்வதற்காக மேற்கு வங்கத்தின் செல்வாக்குமிக்க அரசியல்வாதிகளுக்கு 20 ஆண்டுகளாக வழக்கமாக பணம் செலுத்தி வந்திருக்கிறேன்" என்று லாலா என அழைக்கப்படும் அனுப் மஜி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்கிறது சிபிஐ தரப்பு. மேலும், ஆசான்சோல், துர்காபூர் மற்றும் தன்பாத் ஆகிய இடங்களிலிருந்து நிலக்கரியை கொண்டு சென்ற ஓட்டுநர்கள் மற்றும் துப்புரவாளர்களை தன்பாத்தைச் சேர்ந்த போலீசார் கைது செய்த பின்னரும், அனுப் மஜி மற்றும் மொண்டோலின் அலுவலகங்களிலும் சோதனை நடத்திய பின்னரும் இந்த ஒப்புதல் வாக்குமூலம் அவர் கொடுத்திருக்கிறார்.

இந்த லாலா மேற்கு வங்கத்தில் இருந்து மாடுகளை கடத்திச் செல்லும் கும்பல் மூலமாக நிலக்கரியை கடத்திச் சென்றார் என்றும் கூறப்படுகிறது. எனினும், சிபிஐயிடம் வாக்குமூலம் கொடுத்த அன்றிலிருந்து இருவரும் தலைமறைவாக உள்ளனர். இவர்களுக்கு எதிராக சிபிஐ 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரிணாமுல் காங்கிரஸை தொடர்புபடுத்திய முதல் ஊழல் வழக்கு!

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸை நேரடியாக தொடர்புபடுத்தி இந்த ஊழல் வழக்கு முதன்முதலில் வந்தது. நிலக்கரி மற்றும் கால்நடை மோசடிகள் தொடர்பாக திரிணாமுல் இளைஞர் தலைவர் வினய் மிஸ்ராவின் வீட்டில் 2020 டிசம்பர் 31 அன்று சிபிஐ சோதனை நடத்தியது. கொல்கத்தாவில் உள்ள மிஸ்ராவின் இரண்டு வீடுகளை நிறுவனம் சோதனை செய்தது.

அதன்பிறகு, ஜனவரி 2021-இல், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பியது, ஆனால், அவர் ஆஜராகத் தவறிவிட்டார். பல சம்மன்களுக்குப் பிறகு, சிபிஐ முதலில் மிஸ்ராவுக்கு எதிராக ஒரு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் சிபிஐ நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மாநிலம் முழுவதும் பல இடங்களில் சோதனை நடத்திய பின், வினய் மிஸ்ராவின் சகோதரர் விகாஸ் மிஸ்ராவும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டார்.

ருஜிரா நருலா எப்படி இதில் சிக்கினார்?

டெல்லியைச் சேர்ந்த வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த ருஜிரா நருலா, அபிஷேக் பானர்ஜியை கல்லூரியில் படிக்கும்போது சந்தித்தார் ருஜிரா. இருவரும் காதல் வயப்பட்டு பின்பு திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் பிப்ரவரி 2012-இல் டெல்லியில் நடந்த விழாவில் திருமணம் செய்து கொண்டனர். ருஜிரா பெரும்பாலும் மக்கள் பார்வையில் இருந்து விலகி இருக்கிறார். ஆனால், சுங்கத் துறை தொடர்பான ஒரு வழக்கில் முதல் முறையாக 2019 மார்ச் மாதத்தில் தலைப்புச் செய்தியாக மாறினார்.

தாய்லாந்திலிருந்து திரும்பி வரும் வழியில் கொல்கத்தா விமான நிலையத்தில் இரண்டு கிலோ தங்கத்தை எடுத்துச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்டார் ருஜிரா. இங்கேதான் திருப்புமுனை தருணம். ருஜிரா டெல்லியைச் சேர்ந்த வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தாய்லாந்து நாட்டில். அவரின் தாய்லாந்து வங்கிக் கணக்கில் நிலக்கரி கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள லாலா எனப்படும் அனுப் மஜி, "பாதுகாப்பு பணம்" என்று கோடிக்கணக்கான ரூபாயை செலுத்தியதாக சிபிஐ தரப்பு கூறி ருஜிராவை வழக்கில் சேர்த்துள்ளது. மேலும், இதற்கான ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் சிபிஐ தெரிவிக்கிறது. நிலக்கரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களிடமிருந்து ருஜிரா பணம் பெற்றதாக தனது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சிபிஐ கூறுகிறது.

சிபிஐயிடம் ஆதாரங்கள் இருக்கிறதா?

மேற்கு வங்கம் முழுவதும் நிலக்கரி மோசடி தொடர்பான பிப்ரவரி 19 அன்று நடந்த சோதனைகளின்போது பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில், தாய்லாந்தில் உள்ள காசிகார்ன்பேங்கின் சியாம் பாராகான் கிளையில் ருஜிரா நாரூலா பெயரில் ஒரு வங்கிக் கணக்கு விவரங்கள் இருந்தன.

அபிஷேக்கின் உறவினர் மேனகா கம்பீரின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளைக் காட்டும் வாட்ஸ்அப் உரையாடல்களும் சிக்கியுள்ளன என்கிறது சிபிஐ. இதன் அடிப்படையில்தான் மேனகா கம்பீரை நேற்று சிபிஐ மூன்று மணி நேரத்திற்கு மேல் விசாரித்தது. இதேபோல் தற்போது ருஜிராவையும் அவரது வீட்டுக்கே சென்று சிபிஐ விசாரித்து வருகிறது. சிபிஐ விசாரணைக்கு வருவதற்கு முன்னதாக அபிஷேக்கின் வீட்டிற்கு மம்தா பானர்ஜி வந்து சென்றார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, திரிணாமுல் கட்சி சிக்கியுள்ள இந்த வழக்கை பாரதிய ஜனதா கட்சிக்கு அரசியல் ஆயுதமாக மாற்றியுள்ளது. சமீபத்தில் திரிணாமுல் கட்சியில் இருந்து வெளியேறிய சுவேந்து ஆதிகாரி திரிணாமுல் தலைவர்கள் மற்றும் லாலாவுடனான அவர்களின் உறவு குறித்து பல அறிக்கைகளை வெளியிட்டுவருகிறார். சிபிஐ ருஜிரா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பே, லாலா தாய்லாந்தில் ருஜிரா வங்கிக் கணக்கில் பணத்தை மாற்றியதாக ஆதிகாரி பேசினார். அவரை போலவே மற்ற பாஜக தலைவர்களும் இந்த விவகாரத்தை பிரசாரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com