கொல்கத்தா காவல் ஆணையருக்கு எதிரான சிபிஐயின் நடவடிக்கையை கண்டித்து மம்தா தொடர்ந்த தர்ணா போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது
நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளை மேற்குவங்க காவல்துறையினர், ஆணையர் இல்லத்தின் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். தடுத்து நிறுத்தப்பட்ட சிபிஐ அதிகாரிகள் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து ஆணையர் ராஜீவ்குமார் இல்லத்திற்கு விரைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநில டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் பரப்புகளுக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த மம்தா, பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மம்தாவின் போராட்டத்துக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் ஆதரவாக குரல் கொடுத்தனர்.
கொல்கத்தா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் தர்ணா போராட்டத்தில் காவல் ஆணையர் ராஜீவ்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தர்ணாவுக்கு இடையே அருகில் உள்ள காவல் சோதனை சாவடியில் அமைச்சரவை கூட்டத்தையும் மம்தா நடத்தினார். சில கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு தொடங்கிய தர்ணா 3வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
முன்னதாக தர்ணா குறித்து பேசிய மம்தா, நாட்டை பாதுகாப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த போராட்டம் வரும் 8ம் தேதி வரை தொடரும். இது அரசியல் ரீதியிலான போராட்டம் இல்லை. அதனால் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்த போராட்டத்தில் பங்கேற்கலாம் என்று தெரிவித்தார். மம்தாவின் போராட்டத்துக்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையே சாரதா சிட் ஃபண்ட் விவகாரத்தில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்க உத்தரவிடுமாறு சிபிஐ தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.