ஸ்கூட்டரில் இருந்து தடுமாறி விழப்பார்த்த மம்தா; கைத்தாங்கலாக தாங்கிப்பிடித்த காவலர்கள்!
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழ இருந்தபோது பாதுகாவலர்கள் தகுந்த நேரத்தில் காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்தார். கொல்கத்தாவில் ஹசாரா மோரிலிருந்து தலைமைச் செயலகம் வரை சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு, அமைச்சர் பர்கத் ஹக்கீம் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரில் பயணித்த மம்தா, பெட்ரோல் டீசலுக்கு எதிரான பதாகையை கழுத்தில் அணிந்திருந்தார். பின்னர் பேசிய அவர், மக்களுக்கு எதிரான மோடி அரசு இந்தியாவில் உள்ள அனைத்தையும் விற்பனை செய்து வருகிறது என குற்றம்சாட்டினார்.
முன்னதாக, முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்கூட்டரை ஓட்ட முடியாமல் திணறி சரிந்ததால் உடன் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் தாங்கி பிடித்துக் கொண்டே சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ஸ்கூட்டியை மம்தா பானர்ஜி ஓட்டி வர அவரை சுற்றிலும் பாதுகாவலர்கள் உடன் வருகிறார்கள். பின்புறம் அவர்கள் பிடித்து கொண்டிருந்தாலும் ஹேன்பார் பேலன்ஸை இழந்த மம்தா கீழே விழச் சென்றார். உடனே பாதுகாவலர் ஒருவர் பிடித்துக் கொண்டார். இதனால், அவர் கீழே விழாமல் தப்பினார்.

