இரண்டே மாதங்களில் பதவி விலகிய இன்னொரு எம்பி.. தொடர்ந்து சரியும் மம்தாவின் கூடாரம்!
சில மாதங்களுக்கு முன்புதான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்காலி சினிமாவின் முன்னணி நடிகையான கோயல் முல்லிக், தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது பலரையும் புருவம் உயர்த்தவைத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜிக்கு எதிரான உட்கட்சிப் பூசல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அவரை எதிர்த்து, அதிருப்தி குழுவே தற்போதைய திரிணாமுல் காங்கிரஸ் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. இதுதவிர, அக்கட்சியைச் சேர்ந்த 20 எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரஸிருந்து விலகி, மூத்த தலைவர் ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் தேசியவாத இந்திய குடிமக்கள் (NCPI) கட்சியில் இணைந்தனர். அதோடு கட்சி நிர்வாகிகள் பலரும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி வருகிறார்கள். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருப்பதுடன் மம்தா பானர்ஜியும் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்புதான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்காலி சினிமாவின் முன்னணி நடிகையான கோயல் முல்லிக், தன் பதவியை ராஜினாமா செய்திருப்பது பலரையும் புருவம் உயர்த்தவைத்துள்ளது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வங்காளத் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர், கோயல் முல்லிக். இவர், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், திரிணாமூல் கட்சித் தாவல்களும் கிளர்ச்சிகளும் நிறைந்த இந்தக் காலகட்டத்தில், அவரும் ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில்தான் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்களான சுகேந்து சேகர் ராய், சுஸ்மிதா தேவ் மற்றும் பிரகாஷ் சிக் பராக் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாஜகவில் இணைந்தனர். தற்போது அவரது ராஜினாமாவும் மேற்கு வங்க அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம், கோயலின் வெளியேற்றத்தால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை பலம் 13-லிருந்து வெறும் ஒன்பது ஆகக் குறைந்துள்ளது. மேலும், தொடர்ந்து வெளியேறும் நிர்வாகிகளால் மம்தாவின் கூடாரம் சரிய ஆரம்பித்துள்ளது.
மூத்த நடிகர் ரஞ்சித் முல்லிக்கின் மகளான கோயல் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த மே மாதம் மாநிலங்களவை உறுப்பினராக வங்காள மொழியில் பதவியேற்றார். அப்போது அவர், சிவப்பு நிற பார்டர் கொண்ட தனது பாரம்பரிய வெள்ளை நிறப் புடவையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட பிறகு, வங்காள மக்களுக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்ததற்காக மம்தாவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். இருப்பினும், அவர் தற்போது ராஜினாமா செய்திருப்பது குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

