"அம்மா... நான் திருடல.." திருட்டுப்பழிக்கு பலியான 7ம் வகுப்பு மாணவன்
மேற்கு வங்க மாநிலம் பஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள பன்சுகுராவைச் சேர்ந்தவர், கிரிஷேந்து தாஸ். 7ஆம் வகுப்பு மாணவரான இவர், கோசைபர் பஜாரில் உள்ள ஒரு கடையில் வெளியில் வைக்கப்பட்டிருந்த சிப்ஸ் பாக்கெட் ஒன்றை எடுத்துள்ளார். அதற்காக அவர் காசு கொடுக்கச் சென்றபோது, கடைக்காரர் இல்லை எனக் கூறப்படுகிறது. இதற்காக அவர் காத்திருந்துள்ளார். ஆனால், கடைக்காரர் வந்தபிறகு, மாணவர் சிப்ஸ் பாக்கெட்டை திருடியதாக நினைத்து அவரைத் திட்டியுள்ளார். தவிர, இதுதொடர்பாக அந்த மாணவரின் தாயாரிடம் கூறியுள்ளார். பொதுமக்கள் முன்பு மன்னிப்பு கேட்கவும் கடைக்காரர் வலியுறுத்தியுள்ளார். தாயாரும், தன் மகனை அறைந்ததோடு, அவரும் கண்டித்துள்ளார். அப்போது அந்த மாணவர், ’தாம் திருடவில்லை என்றும், காசு கொடுக்க காத்திருந்தேன்’ எனவும் கூறியுள்ளார். ஆனால் அதை அவர்கள் இருவரும் காதில் வாங்கவில்லை. இதைத் தொடர்ந்து வீட்டுக்கு அந்த மாணவன், வீட்டின் அறைக் கதவைப் பூட்டிக்கொண்டு பூச்சிக்கொல்லி மருந்தைச் சாப்பிட்டுள்ளான்.
நீண்டநேரம் கதவு திறக்காததால், அவரது தாயார் அண்டைவீட்டாரின் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்துள்ளார். அப்போது மகன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். எனினும், அவரை மீட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனாலும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதற்கிடையே அவர் இறப்பதற்கு முன்பு தாம் கைப்பட எழுதிய கடிதத்தில், ”அம்மா நான் திருடன் இல்லை. நான் திருடவில்லை. நான் காத்திருந்தபோது மாமா (கடைக்காரர்) கடையில் இல்லை. திரும்பி வந்தபோது வெளியில் ஒரு சிப்ஸ் பொட்டலம் கிடந்ததைக் கண்டு அதை எடுத்தேன். எனக்கு சிப்ஸ் மிகவும் பிடிக்கும். இவையனைத்தும் நான் சாவதற்கு முன்பு எழுதும் இறுதி வார்த்தைகள். தயவுசெய்து நான் பூச்சிக்கொல்லி சாப்பிட்டதற்காக என்னை மன்னியுங்கள்’ என அதில் தெரிவித்துள்ளார். தவறான கணிப்பால், ஓர் உயிர் பலியாகி இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தவிர, இதுதொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.