மே.வங்கம்: வன்முறையில் 6 பேர் பலி என புகார்; விளக்கம் கேட்கும் உள்துறை அமைச்சகம்
மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் நடைபெற்ற வன்முறைகளில் பாஜக ஆதரவாளர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக புகார் வெளியான நிலையில் அது குறித்து அறிக்கை அளிக்க அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த ஞாயிறன்று அறிவிக்கப்பட்டது. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக்கொண்டது. முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும்போது மாநிலத்தின் பல பகுதிகளில் தங்கள் மீது ஆளும் திரிணாமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இத்தாக்குதலில் தங்கள் கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் என 6 பேர் கொல்லப்பட்டதாகவும் ஏராளமான கடைகள் சூறையாடப்பட்டு, தீ வைக்கப்பட்டதாகவும் பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் என சில பதிவுகளையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து மேற்கு வங்க அரசிடம் உள்துறை விளக்கம் கேட்டுள்ளது. இதற்கிடையில் திரிணாமூல் தொண்டர்கள் அமைதி காக்கவேண்டும் என்றும் வன்முறையை தூண்ட வைக்கும் பாஜகவினரின் முயற்சிகளுக்கு பலியாகி விடக் கூடாது என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.