“காவிரி ஆற்றின் உபரி நீரை தமிழகம் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” - எடியூரப்பா
காவிரி ஆற்றின் உபரி நீரை தமிழகம் பயன்படுத்த ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளார் கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா.
காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகள் அண்மையில் தமிழகத்தில் தொடங்கப்பட்டன. சுமார் 14400 கோடி ரூபாயில் இந்த திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கர்நாடகா இதை சொல்லியுள்ளது.
“நாங்கள் அதை அனுமதிக்கவே மாட்டோம். வெறுமனே அறிக்கைகள் விடுவதெல்லாம் வெட்டி வேலை. தமிழகம் மட்டுமல்ல யாருக்குமே காவிரி ஆற்றின் உபரி நீரை கொடுக்க மாட்டோம். அதற்கு காரணங்கள் எல்லாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதன்படி நாங்கள் வலுவான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்” என எடியூரப்பா பத்திரிகையாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.
மத்தியில் இந்த திட்டத்தின் மீது தங்களுக்குள்ள அதிருப்தியை தெரியப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜரிக்ஹோலி. அது தொடர்பாக அவர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனையும் மேற்கொண்டுள்ளார்.
இந்த திட்டத்தை எதிர்த்து கர்நாடக மாநில எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

