எவ்வளவு நேரம் படிப்பது, எங்களை தூங்க விடுங்கள்: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
நீண்ட நேரம் வகுப்பறையில் பாடங்களை கவனிப்பதாலும், தொடர்ந்து படிப்பதாலும் ஓய்வே இல்லாமல் மன அழுத்தம் ஏற்படுவதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஐதராபாத் நகரில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். 7-ஆம் வகுப்பு முதல் 10 வரை உள்ள 50 மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். காலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை வகுப்புகள் இருப்பதால் தங்களுக்கு மிகுந்த மன அழுத்தமும், தூக்கமின்மையும் ஏற்படுவதாக அவர்கள் கூறினர்.
டியூஷன் மற்றும் அதிகப்படியான வீட்டுப் பாடங்களால் நள்ளிரவில் தான் தூங்கச் செல்ல முடிகிறது, போதுமான அளவு தங்களால் தூங்க முடியவில்லை என்று அவர்கள் தங்களது கஷ்டங்களை தெரிவித்தனர். பள்ளிகளில் விளையாட்டு பிரிவையே மறந்துவிட்டோம் என்றும், தங்களுக்கு நீதிவேண்டும் என்றும் மாணவர்கள் கூறினர்.