“4 நாட்களுக்கு தேவையான தடுப்பூசிகள் மட்டுமே கைவசம் உள்ளன” - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்
டெல்லியில் 3 முதல் 4 நாட்களுக்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மட்டுமே கைவசம் இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், டெல்லி அரசு சில நிறுவனங்களிடம் தடுப்பூசிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளதாகவும், ஆனால் மத்திய அரசுதான் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு ஒதுக்குகிறது என்றும் கூறியுள்ளார்.
ஏனெனில், ஒரு மாதத்தில் மாநிலத்திற்கு கிடைக்கும் பங்கு பற்றி மத்திய அரசிடமிருந்து தான் கடிதம் வருவதாகவும் அவர் குறை கூறினார். கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் அளவுக்கு, டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது அலைக்கு தயாராகும் வகையில், ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரித்து வருவதாகக் கூறினார். தற்போதைய அலையில் ஒரு நாளில் அதிகபட்சமாக 28 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பதிவானதாக அவர் சுட்டிக்காட்டினார். ஒருவேளை அடுத்த அலையில் நாளொன்றுக்கு 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட, அதனை எதிர்கொள்ளும் வகையில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார்.

