“ரூபாய் வீழவில்லை; டாலர்’தான் உயர்கிறது” - நிர்மலா சீதாராமனின் கருத்தும் விமர்சனங்களும்!

“ரூபாய் வீழவில்லை; டாலர்’தான் உயர்கிறது” - நிர்மலா சீதாராமனின் கருத்தும் விமர்சனங்களும்!
“ரூபாய் வீழவில்லை; டாலர்’தான் உயர்கிறது” - நிர்மலா சீதாராமனின் கருத்தும் விமர்சனங்களும்!

அமெரிக்காவிற்கு அலுவல் ரீதியான பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வாஷிங்டன் டிசியில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது நிருபர் ஒருவர், “வரும் நாட்களில் ரூபாயின் மதிப்பு என்னென்ன சவால்களை சந்திக்கக்கூடும்? ரூபாய் மதிப்பு சரிவதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? “ என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், “நான் அதை அப்படி பார்க்கவில்லை. ரூபாய் சரிவதாக பார்க்கவில்லை. தொடர்ந்து டாலர் வலுவடைந்து வருவதாகப் பார்க்கிறேன். மற்ற அனைத்து நாணயங்களும் வெளிப்படையாக அமெரிக்க டாலரை வலுப்படுத்துவதற்கு எதிராக செயல்படுகின்றன. பல வளர்ந்து வரும் சந்தை நாணயங்களை விட இந்திய ரூபாய் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை சரிசெய்வதற்காக சந்தையில் தலையிடுவது இல்லை. நான் முன்பே கூறியுள்ளேன். ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் ஒரே முயற்சி ஆகும். அதிக ஏற்ற இறக்கம் இல்லை என்பதை உறுதி செய்வதுதான் ரிசர்வ வங்கியின் வேலை., ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி தன்னாலான அனைத்தையும் செய்து வருகிறது.” என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் திங்களன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.82.68 என்ற வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த நிலையில், ரூபாய் வீழ்ச்சியை டாலர் வலுவடைவதாக பார்ப்பதாக நிதியமைச்சர் நிர்மலா அளித்த பதில் கடும் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான சுப்ரமணியன் சுவாமி, நிர்மலா சீதாராமன் அளித்த பதிலை கடுமையாக கிண்டல் செய்யும் வகையில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் தோற்கவில்லை. எதிரணி ஜெயித்துவிட்டது.” என்று பொருள்படும் வகையில் “We didn't lose the match. Opposition team won" என்ற ஆங்கில வாக்கியம் அடங்கிய நிர்மலா சீதாராமனின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதற்கு “வாழ்த்துகள். ஜே.என்.யூ எப்போதும் தோற்பதில்லை” என்று தலைப்பிட்டுள்ளார் சுப்ரமணியன் சுவாமி. இப்படி அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் டாலருக்கும் ரூபாய்க்கும் என்ன தான் பிரச்சினை? விரிவாகப் பார்க்கலாம்!

டாலர் Vs ரூபாய்:

உலகம் முழுக்க சந்தை அமெரிக்க டாலரை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. ஒரு நாடு எந்த பொருள் வாங்கினாலும் முதலில் தனது பணத்தை அமெரிக்க டாலராக மாற்றும். அதன் பின் மற்றோரு டாலரை வைத்து வணிகம் செய்யும். எந்த சிரமமும் இல்லாமல் பயணிக்கும் இந்த இடைத்தரகர் “டாலர்” மூலம் அமெரிக்கா கொள்ளை லாபம் பார்ப்பதாக அடிக்கடி புகார் எழுந்து அது அடங்கிப் போய்விடும். எந்த நாடாவது டாலர் வணிகத்தை விட்டு வெளியேறினால் அந்த நாட்டில் அமெரிக்கா தன்னாலான அனைத்தையும் செய்து அந்த எண்ணத்தை வேரோடு நீக்கிவிடும்.

ஆனால் பல நாடுகள் மறைமுகமாக, நேரடியாக பல நாடுகள் டாலர் வணிகத்தை சின்னச் சின்ன விசயங்களில் மீறத் துவங்கி விட்டன. இந்தியா பல முறை ஈரான், ஈராக்கிடம் இருந்து பெட்ரோலை டாலரல்லாத வர்த்தகத்தில் பெற்றுவிட்டது. ஐரோப்பிய யூனியனின் யூரோவை வைத்து ரஷ்யாவும் இன்னும் பல நாடுகளும் வணிகத்தில் ஈடுபட்டு இருந்தன. சர்வதேச வணிகத்தில் மிக முக்கியமான கச்சா எண்ணெய் அடிக்கடி டாலர் வணிகத்தை விட்டு வெளியேறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கும். தற்போது இந்தியாவும் ரஷ்யாவும் தங்கள் நெடுநாள் நட்பை அடிப்படையாக வைத்து, தடாலடியாக ஒரு தனி வர்த்தகத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளன. அதாவது ரஷ்யா - இந்தியா இடையில் நடைபெறும் வர்த்தகம் இனி ரூபாய் - ரூபிள் வர்த்தகமாக நடைபெற உள்ளது. இடைத்தரகர டாலருக்கு இனி இடமில்லை என்று இரு நாடுகளும் முடிவு செய்திருக்கின்றன.

டாலரல்லாத வர்த்தகத்தால் என்ன பலன்?

இப்படி டாலரை புறக்கணித்து வணிகம் செய்வது யாருக்கு லாபம் தரும் என்று சந்தேகம் வரலாம். குழப்பம் தேவையில்லை. இரு நாடுகளின் வணிகத்தில் எதையும் கிள்ளிப்போடாமல் நாணயத்தின் மூலம் பைசா செலவில்லாமல் லாபம் பார்க்கும் அமெரிக்காவின் பங்கு “கட்” ஆகி விடும். கட் ஆகும் அந்த பங்கு வணிகத்தில் ஈடுபடும் இரு நாடுகளுக்கு அவைகளின் சக்திக்கு ஏற்ப பிரித்துக் கொள்ளப்படும். எவ்வாறு அந்த கட் ஆகும் பங்கு பகிரப்பட போகிறது என்பது அந்த நாடுகளுக்கு இடைப்பட்ட பிரச்னை. ஆனால் இந்த “கட்” ஆகும் லாபம் அமெரிக்காவுக்கு பெரும் பிரச்னை.

அவ்வளவு லாபமா டாலரல்லாத வணிகத்தில்? அறிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்!

ரஷ்யாவுடன் இந்தியாவின் வர்த்தகம் இனி டாலரில் அல்ல! ரூபாயில்?! லாபம் யாருக்கு? முழு அலசல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com