மின்னணு ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்யமுடியாதாம்....!
மின்னணு ஓட்டு இயந்திரத்தில், முறைகேடு செய்வதற்கு சிறிதும் வாய்ப்பில்லை என, தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்த, சட்டசபை தேர்தலில், மின்னணு ஓட்டு இயந்திரங்களில் முறைகேடு
நடந்துள்ளதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதை ஏற்க, தேர்தல் கமிஷன் மறுத்தது. மின்னணு ஓட்டு இயந்திரத்தில், முறைகேடு செய்து காட்டும்படி, அரசியல்
கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் சவால் விடுத்தது. ஆனால், எந்த கட்சியும் முன் வரவில்லை. இதற்கிடையில், மஹாராஷ்டிராவில், 2014ல் நடந்த சட்டசபை தேர்தலில்
மின்னணு ஓட்டு இயந்திரத்தில் முறை கேடு நடந்ததாக, மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியுமா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ஐதராபாத்தில் உள்ள, மத்திய தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், ஓரு தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டு இயந்திரங்களையும் ஆய்வுக்கு நீதிமன்றம் அனுப்பி வைத்தது.
இயந்திரங்களை சோதனை செய்த தடயவியல் நிபுணர்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்வது என்ற பேச்சுக்கே
இடமில்லை. இதை, ரிமோட் கருவி மூலம் இயக்கவும் முடியாது. வேறு சாப்ட்வேரையும் பயன்படுத்தி, முடிவுகளை மாற்ற முடியாது. மின்னணு ஓட்டு இயந்திரங்கள்,
ஒருமுறை மட்டுமே 'புரோக்ராம்' செய்யப்பட்டு செயலாக்க கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதனால், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்யும்
பேச்சுக்கே இடமில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மின்னணு ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்து காண்பிக்கும்படி தேர்தல் ஆணையம் சார்பாக போட்டி நடைபெற்றது. இதில் அரசியல் கட்சியினர், நிபுணர்கள் உள்ளிட்டோரிடம் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். இந்த போட்டியின் முடிவை தேர்தல் ஆணையம் அதன்பின் வெளியிடவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

